காத்மாண்டு: நேப்பாளத்தில் பெய்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் உயிரிழந்துவிட்டனர்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முதல் நாடு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியும் மின்னல் தாக்கியும் அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மேலும், சனிக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒன்பது பேரின் கதி என்னவென்று தெரியவில்லை எனவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) குறிப்பிட்டனர்.
மரண விவரத்தைக் காத்மாண்டு காவல்துறையின் பேச்சாளர் பினோத் கிமைர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
நேப்பாளத்தின் கிழக்கே இந்திய எல்லை அருகே உள்ள இலாம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மட்டும் 35 பேர் உயிரிழந்ததாக ஆயுதக் காவற்படையின் பேச்சாளர் காளிதாஸ் தவ்போஜி கூறினார்.
தெற்கு நேப்பாளத்தில் மின்னல் தாக்கியும் கிழக்கு நேப்பாளத்தின் உதயப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியும் மேலும் 12 பேர் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
மழையிலும் வெள்ளத்திலும் சிக்கியோரை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக நேப்பாளத்தின் தேசியப் பேரிடர் அபாயத் தணிப்பு மற்றும் மேலாண்மை ஆணையப் பேச்சாளர் ஷாந்தி மகாத், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நிலச்சரிவுகளால் பல்வேறு விரைவுச் சாலைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் அவற்றில் சில வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதன் காரணமாகப் போக்குவரத்து வசதியின்றி நூற்றுக்கணக்கானோர் சிரமப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
“மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியன காரணமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், அனைத்துலக விமானச் சேவைகள் பாதிக்கப்படவில்லை,” என்று காத்மாண்டு விமானநிலையப் பேச்சாளர் ரிஞ்சி ஷெர்பா தெரிவித்தார்.
நேப்பாளத்தின் தென்கிழக்கே ஓடும் கோஷி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவைக் கடந்துவிட்டதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பாக்மதி ஆறு நிரம்பிவிட்டதால் அதன் கரையோரத்தில் குடியிருக்கும் மக்களை நேப்பாள ராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றித் தற்காலிக நிவாரண முகாம்களுக்குக் கொண்டு சென்றனர்.