கேன்பரா: கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பல நகரங்களில் கடந்த வார இறுதியில் கடுமையான வானிலை காரணமாக கனமழை பெய்தது.
இதனால், சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அத்துடன், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவை இருளில் மூழ்கின.
சில நகரங்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கனத்த பனிப்பொழிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி சில பகுதிகளில் ஏறக்குறைய 50 சென்டிமீட்டர் பனிப்பொழிவும் மற்ற பகுதிகளில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழையும் பெய்யும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகாலச் சேவை தெரிவித்தது.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) நிலவரம் சீரடைந்து வருவதாக அது கூறியது.
மாநிலத்தின் நியூ இங்கிலாந்து வடமேற்கு வட்டாரத்தின் சில பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பனிப்பொழிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்தது.
அதேசமயம், அண்டை மாநிலமான குவீன்ஸ்லாந்தின் ஒரு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாகப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகச் சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்தது.
இதன் தொடர்பில் 1,455க்கும் மேற்பட்ட சம்பவங்களை தான் கையாண்டதாகவும் பனிப்பொழிவால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் சிக்கிக்கொண்டதாகவும் புயலால் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் அவசரகாலச் சேவை தெரிவித்தது. பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆயிரக்கணக்கான வீடுகளில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லை என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் கூறியது.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்சில் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை வெள்ளத்தில் ஒரு கார் சிக்கிக்கொண்டதாகவும் அதில் பயணம் செய்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
அவரைத் தேடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெற்று வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.