கோலாலம்பூர்: அடுத்த இரு வாரங்களில் மலேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிளஸ் மலேசியா பெர்ஹாட் அமைப்பு தெரிவித்தது.
மலேசிய நெடுஞ்சாலைகளை அந்த அமைப்பு நிர்வகிக்கிறது. பள்ளி விடுமுறைக் காலத்துடன், ஹஜ்ஜுப் பெருநாள் செவ்வாய்க்கிழமை (மே 27), விசாக தினம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) மலேசிய மாமன்னர் பிறந்தநாள் திங்கட்கிழமை (ஜூன் 1) ஆகிய விடுமுறைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் ஏறத்தாழ 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அதன் நெடுஞ்சாலைகளை அக்காலகட்டத்தில் பயன்படுத்தும் என அமைப்பு கணித்துள்ளது.
பாகாங், திரங்கானு மாநிலங்களை இணைக்கும் ஈஸ்ட் கோஸ்ட் ஃபேஸ்2 (LPT2) விரைவுச்சாலையில் மட்டும் போக்குவரத்து நெரிசல் தினசரி 50,000 வாகனங்கள் வரை எட்டும் எனவும் பிளாஸ் மலேசியா பெர்ஹாட் குறிப்பிட்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறும் உச்ச நேரப் போக்குவரத்து மே மாதக் கடைசிவரை சற்று குறைந்தாலும் அப்பகுதிக்குத் திரும்பும் போக்குவரத்து, ஜூன் 4 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அவரவரும் தங்களது கிராமக் கம்பத்து வீடுகளுக்குத் திரும்ப விரும்புவோர் விடுமுறைகளைத் திட்டமிட்டு செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிளஸ் செயலியில் உள்ள மைபிளஸ்-டிடிஏ (MyPLUS-TTA) மின்னிலக்கப் பயண அட்டவணையைப் பார்த்துக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது,” என பிளஸ் மலேசியா பெர்ஹாட் கூறியது.
கூடுதல் அதிகாரிகள்
பாதுகாப்பை உறுதி செய்யவும் பயணத்தை சீராக்கவும் போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் அறிவார்ந்த சாலைத் தடங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைப்பு குறிப்பிட்டது. மேலும் பிளஸ்ரொண்டா, எல்பிடி2ரொண்டா பிரிவுகளின் 500 அதிகாரிகள் 24 மணிநேரமும் ரோந்துப் பணிகளில் அமர்த்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

