சுபாங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில் எந்திரச் சோதனையின்போது கமோவ் கே-32 ரக ஹெலிகாப்டர் ஒன்று தீப்பற்றிக்கொண்டது.
அந்த விபத்திலிருந்து நால்வர் தப்பிய நிலையில் ஹெலிகாப்டருக்கு வெளியே இருந்த ஒருவர் அதிலிருந்து சிதறிய பாகங்கள் தாக்கிக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மலேசியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம், சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட விமான ஓடுபாதை பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
பழுதுபார்ப்புக்குப் பிறகு எந்திரப் பரிசோதனைக்காக ஹெலிகாப்டர் புறப்படவிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகச் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பார் தெரிவித்தார்.
நண்பகல் 12.30 மணியளவில் அவசர அழைப்பு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், உக்ரேனில் பதிவுசெய்யப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் தீ பிடித்திருந்ததைக் கண்டதாக அவர் கூறினார்.
ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரும் தீப்பற்றியபோது அதிலிருந்து தப்பித்து வெளியேறினர்.
விமான நிலையத்தின் விமான மீட்பு, தீயணைப்பு சேவை குழுவும் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.


