ஹட்சன் ஆற்றில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; அறுவர் மரணம்

2 mins read
6c14350f-1fe6-43e5-a413-9a8db0196167
ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்களை ஹட்சன் ஆற்றிலிருந்து வெளியே எடுத்த மீட்புப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த ஆறு பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்பானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் ஹெலிகாப்டர் விமானியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

மாண்டோரில் மூன்று பிள்ளைகளும் அடங்குவர்.

இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நிகழ்ந்தது.

மாண்ட ஆறு பேரின் உடல்களும் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுவிட்டதாக நியூயார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் மீளாத் துயரில் தம்மை ஆழ்த்தியிருப்பதாக அவர் கூறினார்.

மாண்டோரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, மாண்டோரில் ஒருவர் சீமன்ஸ் எனும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்பானிய நிர்வாகியான திரு அகஸ்டின் எஸ்கோபார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹெலிகாப்டர் ஹட்சன் ஆற்றில் விழுந்து நொறுங்கியதை அடுத்து, அதில் இருந்தோரைக் காப்பாற்ற நியூயார்க் காவல்துறை, நியூயார்க் தீயணைப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த முக்குளிப்பாளர்கள் முயன்றனர்.

நான்கு பேரை நியூயார்க் காவல்துறையைச் சேர்ந்த முக்குளிப்பாளர்களும் இருவரை நியூயார்க் தீயணைப்புப் படையைச் சேர்ந்த முக்குளிப்பாளர்களும் இடிபாடுகளிலிருந்து மீட்டு கரைக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆயினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததாக அறியப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த நாளன்று நியூயார்க்கில் பலத்த காற்று வீசியதாகவும் மேகமூட்டமாக இருந்ததாகவும் என்பிசி4 ஒளிவழி தெரிவித்தது.

ஹெலிகாப்டரின் உந்துவிசை நடுவானில் வெடித்துச் சிதறியது போலத் தெரிந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகமும் இணைந்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டவர்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்