ஜகார்த்தா: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் இடம்பெயர்தலுக்கான அமைப்பு இந்தோனீசியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதநேய உதவிகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவில் அந்த அமைப்பின் தலைவரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) அதை உறுதி செய்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கா வெளிநாட்டில் உள்ள உதவி அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதைக் குறைப்பதாக அறிவித்தது. இதனால் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைப்புகளும் பாதிக்கப்பட்டன.
தகுந்த நிதி உதவி இல்லாததால் 900க்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறைக்கப்படுவதாகக் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஜகார்த்தாவில் அந்த அமைப்பின் தலைவர் ஜெஃப் லபோவிட்ஸ், சுமத்ரா தீவின் பெக்கான்பாருவில் உள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதநேய உதவிகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
உதவிகளைக் குறைக்கத் திட்டமில்லை என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் அவர் மேல்விவரங்கள் ஏதும் வழங்கவில்லை.
இதற்கிடையே இடம்பெயர்தலுக்கான அமைப்பு மின்னஞ்சல் வாயிலாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கவும் உதவிகளைப் பெறவும் பல வழிகளை ஆராய்ந்து வருகிறோம். மனிதநேய உதவிகளைத் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தோனீசியாவில் கிட்டத்தட்ட 2,800 ரோஹிங்யா அகதிகள் உள்ளனர்.
பெரும்பாலான ரோஹிங்யா அகதிகள் முஸ்லிம்கள். அவர்கள் மியன்மாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.