வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரினால் மூடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க, அமெரிக்க ராணுவத்தை நம்பியிருப்பதற்காக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் விமர்சித்துள்ளார்.
“பல்லாண்டுகளாக அமெரிக்கா வழங்கும் பாதுகாப்பால் ஐரோப்பாவும் ஆசியாவும் பயனடைந்துள்ளன, ஆனால் இனிமேல் எந்தவித பங்களிப்புமின்றிப் பலன் அனுபவிக்கும் காலம் முடிந்துவிட்டது,” என்று வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு ஹெக்செத் கூறினார்.
“திறமையான மற்றும் விசுவாசமான கூட்டாளிகள் தான் அமெரிக்காவிற்கும் சுதந்திர உலகத்திற்கும் தேவை,” என்றார் அவர்.
பாரசீக வளைகுடாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு செல்வதற்கான முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் முற்றுகை, அப்பகுதியில் உள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களைச் சுற்றி சில கப்பல்கள் செல்வதாக வந்த செய்திகளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது என்று அமைச்சர் ஹெக்சத் கூறினார்.
போர் நிறுத்தத்திற்கான அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கோரிக்கைகளுக்கு ஈரான் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அமெரிக்கா இந்த முற்றுகையைத் தொடங்கியது. ஈரானிய அச்சுறுத்தல்களால் பேரளவிலான எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. பிப்ரவரி பிற்பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கியதிலிருந்து உலகளாவிய எரிசக்தி விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
பாரசீக வளைகுடாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வெளியேறும் இந்த முக்கிய நீர்வழியை மீண்டும் திறக்கவும் பாதுகாக்கவும் உதவுமாறு ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் புவிசார் அரசியல் ரீதியில் போட்டி நாடான சீனா உட்பட மற்ற நாடுகளுக்குத் திரு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகள் அங்கு கப்பல்களை அனுப்ப இணங்கவில்லை.

