இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயர்மட்ட தளபதிகள் கொல்லப்பட்டனர்

ஹிஸ்புல்லாவுக்கு பின்னடைவு

2 mins read
66c01118-8d64-4ce8-863a-55839dfaa7d0
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேலியத் தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கு இடையே பணியில் ஈடுபடுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 31 போராளிகளில் இரண்டாவது மூத்த ராணுவத் தளபதியும் ஒருவர் என ஹிஸ்புல்லா அமைப்பு சனிக்கிழமை (செப்டம்பர் 21) தெரிவித்தது.

ஹிஸ்புல்லாவின் ராணுவத் தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை இந்த உயிர்ச்சேதம் கோடிட்டுக் காட்டுகிறது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முன்னணி ரத்வான் படைத் தலைவர் இப்ராகிம் அகிலும் இதர மூத்த ராணுவத் தலைவர்களும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

ராணுவத் தலைவர்கள் உடனான சந்திப்பு ஒன்றில் அகில் இருந்தபோது அவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லாவுக்கு நெருக்கமான ஒரு தரப்பு தெரிவித்தது.

லெபனானில் ஹிஸ்புல்லாவின் கோட்டையாக உள்ள பல பகுதிகளில் இந்த வாரம் அகவிகள் (பேஜர்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் 37 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து நடந்துள்ள இந்த வான்வழித் தாக்குதல், ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, அதன் போராளிகளின் மனவுறுதிக்குக் கடும் அடியைத் தந்துள்ளது.

இரண்டாவது மூத்த ராணுவத் தளபதியை அகமது மஹ்முட் வஹ்பி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 அக்டோபரில் காஸா போர் தொடங்கியதிலிருந்து 2024 தொடக்கம் வரை இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் போர் நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கியதாக அந்த அமைப்பு கூறியது.

அகிலின் மரணத்தை உறுதிப்படுத்திய ஹிஸ்புல்லா, அவரை “மாபெரும் தலைவர்களில் ஒருவர்” எனப் போற்றியது. 1983ல் பெய்ரூட்டில் இருந்த அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதற்காக அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர் அகில்.

இந்நிலையில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல், தரையில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தி ஓர் உயரமான கட்டடத்தின் கீழ்த்தளங்களை குடைந்தெடுத்ததாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

காஸா போர் தொடங்கியதிலிருந்து ஹிஸ்புல்லா ராணுவத் தலைமை மீதான இஸ்ரேலின் இரண்டாவது தாக்குதல் இது. கடந்த ஜூலை மாதம், பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட செயலாக்கத் தலைவர் ஃபுவாத் ஷுக்ர் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, பதற்றம் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாட்டு (ஐநா) நிறுவனம் மிகவும் கவலைப்படுவதுடன், அனைத்துத் தரப்பிலிருந்தும் “அதிகபட்ச கட்டுப்பாடு” வேண்டும் என்று அறைகூவல் விடுத்ததாக ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரசின் பேச்சாளரான திரு ஸ்டீஃபன் டுஜாரிச் கூறினார்.

பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பு, லெபனானிலிருந்து டஜன் கணக்கான எறிபடைகளை ஹெஸ்புல்லா பாய்ச்சியதாக இஸ்ரேல் கூறியது.

குறிப்புச் சொற்கள்