ஜெருசலம்/பெய்ரூட்: இஸ்ரேலுக்கு எதிராக ஆகஸ்ட் 25ஆம் தேதி ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான உந்துகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் பாய்ச்சியுள்ளது.
பெய்ரூட்டில் கடந்த ஜூலை மாதம் மூத்தத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அந்தத் தாக்குதலை மேற்கொண்டது.
அண்மைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஆயத்தமாக, இஸ்ரேலின் அமைச்சரவை சந்தித்துள்ளது.
ஹிஸ்புல்லா தாக்குதலைத் தொடங்க தயாராகிக்கொண்டிருப்பதைக் கணித்ததால், அதற்கு முன்னரே தாக்குதல்களை மேற்கொண்டு மேலும் பெரிய அளவிலான தாக்குதலைத் தவிர்த்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
தென் லெபனானில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தளங்களைக் கிட்டத்தட்ட 100 இஸ்ரேலிய விமானங்கள் தாக்கியதாக ராணுவம் கூறியது.
இருப்பினும், இஸ்ரேலின் தகவலை ஹிஸ்புல்லா நிராகரித்துள்ளது. அந்த நாளில் தனது ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக அது அறிக்கை ஒன்றில் கூறியது.
இதற்கிடையே, இஸ்ரேலை நோக்கி 320க்கும் மேற்பட்ட ‘கட்யுஷா’ உந்துகணைகளைப் பாய்ச்சியதாகவும் 11 ராணுவப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்தது.
கடந்த ஜூலையில் திரு ஃபுவாட் ஷுக்கர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக நடத்தப்படும் தாக்குதலின் முதற்கட்டம் நிறைவுபெற்றுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது. இருப்பினும், முழு அளவிலான பதிலடி நடவடிக்கை சற்று நேரம் எடுக்கும் என்றது அது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தன்னைத் தற்காக்க இஸ்ரேல் தனக்குத் தேவையான அனைத்தையும் செய்யும் என்று தற்காப்பு அமைச்சர் யோயேவ் காலண்ட் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்களில் பல, தென் லெபனானில் உள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டுள்ளன. இருப்பினும், மிரட்டலாக இருக்கக்கூடிய எந்த இடத்தையும் தாக்க ராணுவம் தயாராக உள்ளதாக, இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் கூறினார்.
இதனிடையே, திரு காலண்ட் அவசரநிலையை அறிவித்துள்ளார். டெல் அவிவ் பகுதியில் உள்ள ‘பென் குரியோன்’ விமான நிலையத்திற்குச் செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காலை ஏழு மணிக்குள் விமானச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

