தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லெபனானில் வெடித்துச் சிதறிய அகவிகள்; 12 பேர் மரணம், பலர் காயம்

3 mins read
1e88174b-e487-4ea9-ae91-9038ef4db942
அகவி வெடித்ததால் காயமுற்ற ஒருவர் பெய்ரூட் மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

பெய்ரூட்: லெபனானில் உள்ள பல பகுதிகளில் அகவிகள் (பேஜர்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.

அகவிகள் வெடித்ததில் குறைந்தது பன்னிரண்டு பேர் மாண்டனர்.

செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்த இத்தாக்குதலில் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததாக லெபனானிய சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்தார்.

காயமடைந்தோரில் 200 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் கூறினார்.

தாக்குதலில் ஹிஸ்புல்லா போராளிகள் பலரும் லெபனானுக்கான ஈரானியத் தூதரும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயம் அடைந்த ஹிஸ்புல்லா போராளிகளில் பலர் அந்த அமைப்பின் மூத்த அதிகாரிகளின் மகன்கள் என்று தெரியவந்துள்ளது.

மாண்டோரில் ஒருவர் லெபனானிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவருமான திரு அலி அம்மரின் மகன் என்று தெரிவிக்கப்பட்டது.

இத்தாக்குதலை இஸ்‌ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளது.

இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அது சூளுரைத்தது.

“ஒட்டுமொத்த நாட்டையே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,” என்று ஹிஸ்புல்லா அதிகாரி உசேன் கலில் தெரிவித்தார்.

லெபனானை உலுக்கியுள்ள இத்தாக்குதல் தொடர்பாக இஸ்‌ரேல் கருத்து தெரிவிக்கவில்லை.

ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள ஹிஸ்புல்லா போராளிகளும் லெபனானில் உள்ள பலரும் அகவிகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் ஸியாட் மகாரி கூறினார்.

அகவிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

காஸா மீது இஸ்‌ரேல் 2023ஆம் ஆண்டிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்புக்கும் பாலஸ்தீனர்களுக்கும் ஆதரவாக இஸ்‌ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இந்த மோதல் தொடங்கியதிலிருந்து செப்டம்பர் 17ஆம் தேதியன்று நிகழ்ந்த இத்தாக்குதல், ஹிஸ்புல்லா அமைப்பைப் பாதித்துள்ள மிக மோசமான பாதுகாப்பு அத்துமீறல் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தைவானில் உற்பத்தி செய்யப்பட்டு லெபனானுக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய அகவிகளுக்குள் இஸ்‌ரேல் வெடிபொருளைப் பதுக்கி வைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவானைச் சேர்ந்த அப்போலோ கோல்டு நிறுவனத்திடமிருந்து அந்த அகவிகளைத் லெபனான் கொள்முதல் செய்தது.

அவை தைவானை அடைவதற்கு முன்பு அவற்றுக்குள் வெடிபொருள் பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும், வெடித்துச் சிதறிய அகவிகளை உற்பத்தி செய்யவில்லை என்று அப்போலோ கோல்டு கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வெடித்துச் சிதறிய அகவிகள் ஐரோப்பாவில் உள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டதாக அப்போலோ கோல்டு நிறுவனத்தின் நிறுவனர் சூ சிங் குவாங் கூறினார்,

அப்போலோ கோல்டின் பெயரைப் பயன்படுத்தும் உரிமை அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 28 கிராம் எடை கொண்ட வெடிபொருள் ஒவ்வொரு அகவியின் மின்கலனுக்குப் பக்கத்தில் பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொலைவிலிருந்து அந்த அகவிகளை வெடிக்கச் செய்யும் விசை ஒன்று செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

லெபனான் நேரப்படி செப்டம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி அளவில் அந்த அகவிகளுக்குத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அனுப்பியது போல அந்தத் தகவல் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்தத் தகவல் வெடிபொருளை வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்