கோலாலம்பூர்: ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தாமன் ஷாமெலினில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் 33 பேருக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கூடுதலாக 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த வாரம், அந்த நபர்களுக்கு 2,000 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த மறுஆய்வு மனு தொடர்பில், நீதிபதி அஸ்லாம் ஜைனுதீன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
“தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனை தொடங்கும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது,” என்று நீதிபதி அஸ்லாம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 21) கூறினார்.
ஏப்ரல் 10ஆம் தேதியன்று, தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருள்கள், தடிகள், கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கலவரத்தில் பங்கேற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட 32 பேருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 3,000 ரிங்கிட் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் நான்கு மாதச் சிறைத்தண்டனையும் விதித்தது. மேலும் 19 வயதுடைய இளம் குற்றவாளிகள் இருவருக்குத் தலா 2,000 ரிங்கிட் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மூன்று மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் செராசில் உள்ள ஒரு பொழுதுபோக்கு வளாகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அவர்கள் அனைவரும் அபராதத்தைச் செலுத்தியிருந்தனர். ஆனால், அபராதத்தைச் செலுத்தாமல், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய ஏ. கணேசனுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.
முன்னதாக, அரசுத்தரப்பு வழக்கறிஞர் முகமது நோர்டின் இஸ்மாயில், அந்த ஆடவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முடிவு பொதுமக்களிடையே சர்ச்சைக்குரியதாக இருந்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர்கள் ஒரு பெரிய குழுவாக அந்தப் பொழுதுபோக்கு வளாகத்தைத் தாக்கியதாகவும், குற்றத்தின் தீவிரத்தைப் பிரதிபலிக்க அபராதம் மட்டும் விதிப்பது போதுமானதன்று என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் டேமியன் சான், இந்தச் சம்பவத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறினார்.
“அவர்கள் சொத்துகளை மட்டுமே சேதப்படுத்தினர். மேலும், முதல் கட்டத்திலேயே தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். நடந்த செயலுக்காக அவர்கள் உண்மையாகவே வருந்துகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.

