தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இழப்பீடு: முகைதீனுக்கு நீதிமன்றம் உத்தரவு

1 mins read
2ea80dd9-d113-436f-9164-7cb44bdfddba
முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுக்கு (வலது) எதிராக ஜனநாயகச் செயல் கட்சியின் தலைவர் லிம் குவான் எங் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். - படங்கள்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) தலைவர் லிம் குவான் எங்கிற்கு முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் இவ்வாண்டு இறுதிக்குள் 400,000 ரிங்கிட் (S$121,000) வழங்க வேண்டும் என்று மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வழக்கில் பெர்சத்துக் கட்சித் தலைவரான முகைதீன் 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 8ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக 400,000 ரிங்கிட்டை 2024 இறுதிக்குள்ளாகவும் எஞ்சிய தொகையை 2025 ஜனவரி 27ஆம் தேதிக்குள்ளாகவும் திரு முகைதீன் வழங்க வேண்டும் என்று திங்கட்கிழமை (டிசம்பர் 16) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

திரு லிம்மின் வழக்கறிஞரும் திரு முகைதீனின் வழக்கறிஞரும் இதனை உறுதிப்படுத்தினர்.

அத்துடன், வழக்குச் செலவாகவும் 50,000 ரிங்கிட்டைத் திரு முகைதீன் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

அல்புகாரி அறநிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கு தொடர்பில் திரு முகைதீன் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, அவர்மீது திரு லிம் 2024 மார்ச் 27ஆம் தேதி அவதூறு வழக்கு தொடுத்தார்.

கடந்த 2023 மார்ச் 9ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, திரு முகைதீன் ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாகத் தம்மீது அவதூறு பரப்பினார் என்று திரு லிம் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2018-2020 காலகட்டத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திரு லிம் நிதியமைச்சராகச் செயல்பட்டார்.

குறிப்புச் சொற்கள்