மட்ரிட்: ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு மற்றொரு ரயில் மீது மோதியதில் குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டுக் காவல்துறை கூறியது. இத்தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இன்னொரு ரயில் மோதியதில் இரண்டாவது ரயிலும் தடம் புரண்டது.
சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று ஸ்பானியப் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் பியூன்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேராகச் செல்லும் தண்டவாளத்தில் ரயில் தடம் புரண்டது வினோதமாக இருப்பதாக அவர் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த தண்டவாளம் மே மாதத்தில் புதுப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் பியூன்டே தெரிவித்தார்.
அவசரகால மருத்துவ அதிகாரிகள் 122 பேருக்குச் சிகிச்சை அளித்தனர்.
48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐவர் சிறுவர்கள்.
11 பெரியவர்களும் சிறுவர் ஒருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வட்டார சுகாதாரத்துறை தலைவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ரயில் பாதையில் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து ஸ்பானிய மன்னர், அரசியார், பிரதமர் பெட்ரோ சான்சேஸ் ஆகியோர் கவலை தெரிவித்திருப்பதாகவும் நிலைமையை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் ஸ்பானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிர் பிழைத்தோரைத் தேடி மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்காகச் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் உள்ள ராணுவ முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது இரண்டு ரயில்களிலும் ஏறத்தாழ 400 பேர் இருந்ததாக ஸ்பானிய ஊடகம் தெரிவித்தது.
ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

