புத்ராஜெயா: பொது உயர்கல்வி நிலையங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், சமூகக் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து 3,000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை மையமாகக் கொண்டிருந்த அரசாங்கத்தின் இலவசக் கல்வி முயற்சியின் மேலும் விரிவாக்கத்தை இந்த நடவடிக்கை குறிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
“2026 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, ஆரம்பக் கட்டத்தில், கடுமையான ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5,800 மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) அன்று தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2026-2035ஐ அறிமுகப்படுத்தியபோது விவரித்தார்.
ஆனால் தற்போது, தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் (பிடிபிடிஎன்) கீழ், கூடுதல் ஆதரவு மூலம் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 10,000 மாணவர்களுக்கு உதவி அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், கொள்கை உருவாக்கம் முக்கியமானது என்றாலும், செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது என்று திரு அன்வார் எச்சரித்தார்.
உயர்ந்த இலக்குகளுக்கும் அவற்றின் உண்மையான செயல்பாட்டிற்கும் இடையே பெரும்பாலும் பரந்த இடைவெளி இருப்பதாக அவர் கூறினார். அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், துணைவேந்தர்கள், இயக்குநர்கள் ஆகியோர் திட்டத்தை திறம்பட நிறைவேற்றுவதற்கு கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
“இந்தத் திட்டத்தால் அவர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் அதன் செயல்படுத்தல் குறித்த மாதாந்தர அறிக்கைகளை வழங்கக் கடமைப்பட்டுள்ளனர்.
“செயல்படுத்தல் தோல்வியுற்றால், பெரும் ஆரவாரம், வலுவான சொல்லாட்சி, ஈர்க்கக்கூடிய ஆவணங்களுடன் ஒரு திட்டத்தைத் தொடங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை,” என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் காகிதத்தில் உலகத் தரம் வாய்ந்ததாகத் தோன்றினாலும், அதன் உண்மையான சோதனை செயல்படுத்தலில் உள்ளது என்றும் திரு அன்வார் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்துப் பொறுப்பான தரப்பினரும் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து செயல்படுத்தல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் முறையான நடைமுறைப்படுத்தலை உறுதி செய்வதற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இது வெறும் நினைவூட்டல் அல்ல. ஆனால் என்னிடமிருந்து வரும் ஒரு கடுமையான எச்சரிக்கை,” என்று அவர் கூறினார். பல நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் பலவீனமான செயல்படுத்தல் காரணமாக தோல்வியடையும் அபாயம் இருப்பதாக திரு அன்வார் கவலை தெரிவித்தார்.

