பெட்டாலிங் ஜெயா: பொது மருத்துவர்களுக்குச் செலுத்தும் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவர மலேசிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து வரும் மே மாதத்துக்குள் அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் அன்வார் இப்ராகிம், மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்தார்.
மலேசியாவின் வாழ்க்கைச் செலவின தேசிய செயல் மன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக திரு ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
“பொது மருத்துவர்களை நாடுவதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நாங்கள் அரசாங்க அமைப்புகளுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது,” என்று அவர் வியாழக்கிழமையன்று (மார்ச் 13) செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
மலேசியாவில் தற்போது பொது மருத்துவர்களை நாடுவதற்கான கட்டணம் 10லிருந்து (மூன்று வெள்ளி) 35 ரிங்கிட்டுக்கு இடைப்பட்டிருக்கிறது. அதை 50லிருந்து 150 ரிங்கிட்டுக்கு இடைப்பட்டதாக மாற்றுவதற்கு அந்நாட்டின் தனியார் மருத்துவர்கள் கூட்டமைப்புச் சங்கம் முயற்சி எடுத்தது.
இக்கட்டணத்துக்கான உச்சவரம்பு 2006ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டதாக அச்சங்கம், இம்மாதம் ஆறாம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. கடந்த ஆண்டுகளில் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் பல சிறிய மருந்தகங்கள் மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டியது.
மே மாதம் ஒன்றாம் தேதி முதல் தனியார் மருந்தகங்கள், மருந்துகளின் விலையைப் பிறருக்குத் தெரியப்படுத்தும் வண்ணம் பார்வைக்கு வைக்கவேண்டியது கட்டாயமாகும். அதுபற்றியும் பேசிய திரு ஸுல்கிஃப்லி, தனியார் மருத்துவமனைகள் அந்த விதிமுறைக்குத் தயாராய் இருப்பதாகச் சொன்னார். அதேவேளை, தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், சேவைச் சட்டத்தின் (Private Healthcare Facilities and Services Act) ஏழாம் பிரிவின்கீழ், தனியார் மருத்கங்களில் செயல்படும்பொது மருத்துவர்கள் தங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணத்தில் மாற்றம் இருந்தால்தான் தாங்கள் விதிமுறைக்கு இணங்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று திரு ஸுல்கிஃப்லி கூறினார்.
“இந்த விவகாரத்தில் நான் தொடர்ந்து போராடுவேன் என்று பொது மருத்துவர்களுக்கு உத்தரவாதம் தந்துள்ளேன். மே ஒன்றாம் தேதி மருத்து விலை விதிமுறை அமலுக்கு வரும்போது அவர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என்பதை நான் நம்புவதாகவும் அவர்களிடம் சொன்னேன்,” என்று அவர் விளக்கினார்.