கோலாலம்பூர்: மலேசியாவிலேயே சிலாங்கூர் மாநிலத்தில்தான் ஆக அதிகமான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மலேசிய நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுசேன் இஸ்மாயில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
2015க்கும் 2025க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் அந்த மாநிலத்தில் 3,392 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவானதாகவும் அவற்றில் 1,575 சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை அதிகமாக நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில் ஜோகூர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அங்கு கடந்த பத்தாண்டுகளில் 2,006 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவானதில் 806 சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
மூன்றாம் இடத்தில் சாபா மாநிலம் உள்ளது. அங்கு நிகழ்ந்த 1,817 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் 505 சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
நான்காவதாக கெடா மாநிலத்தில் 1,465 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவானதில் 465 சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.
மலேசியாவிலேயே பாலியல் வன்கொடுமை குறைந்த மாநிலமாக பெர்லிஸ் உள்ளது. பத்தாண்டுகளில் 275 சம்பவங்களே அங்கு பதிவாகி உள்ளன.
பத்தாண்டு காலத்தில் மலேசியா முழுவதும் பதிவான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களின் எண்ணிக்கை 17,609 என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பதிவான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் 7,090 சம்பவங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
பக்கத்தான் ஹரப்பானின் கெப்போங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய வினாவுக்கு அவர் பதிலளிக்கையில் இந்த விவரங்களை அளித்தார் அமைச்சர்.

