வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசாங்கச் சேவையில் சிறப்பாகப் பங்களித்த 19 பேருக்கு ‘மெடல் ஆஃப் ஃபிரீடம்’ எனும் ஆக உயரிய விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
விருதளிப்பு நிகழ்ச்சி, ஜனவரி 4ஆம் தேதி, வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
முன்னாள் அரசாங்க அதிகாரிகள், விளையாட்டாளர்கள், வள்ளல்கள் போன்றோர் விருது பெற்றோரில் அடங்குவர்.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் செனட்டருமான திருவாட்டி ஹில்லரி கிளின்டன், ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் இயர்வின் ‘மேஜிக்’ ஜான்சன், காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, நன்கொடையாளர் ஜார்ஜ் சோரோஸ், திரை நட்சத்திரம் டென்ஸெல் வாஷிங்டன் போன்றோருக்கு ‘மெடல் ஆஃப் ஃபிரீடம்’ பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார் திரு பைடன்.
இந்தப் பதக்கம் அமெரிக்கக் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆக உயரிய விருதாகும்.
அமெரிக்காவின் வளப்பம், விழுமியங்கள், பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கும் உலக அமைதிக்கும் இதர குறிப்பிடத்தக்க சமூக, அரசாங்க, தனிப்பட்ட பெருமுயற்சி ஆகியவற்றுக்கும் சீரிய முறையில் பங்களித்தோரை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
மறைந்த முன்னாள் தலைமைச்சட்ட அதிகாரியும் செனட்டருமான ராபர்ட் எஃப் கென்னடி, அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தில் தற்காப்பு அமைச்சராகப் பணியாற்றிய காலஞ்சென்ற ஆஷ்டன் கார்ட்டர் போன்றோருக்கு இறப்புக்குப்பின் வழங்கப்படும் அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.