பங்களாதேஷில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

பங்களாதேஷில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

2 mins read
572b79fa-6808-4159-8f23-6ef0f470ae43
பங்களாதேஷ் பிரதமராகப் பதவியேற்ற தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

டாக்கா: பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான், நாட்டின் சிக்கலான பொருளியலை வழிநடத்தும் பொறுப்பை தொழிலதிபரும் முன்னாள் அமைச்சருமான 76 வயது அமீர் கஸ்ரு மஹ்முட் சௌத்ரியிடம் வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பை தாமே வைத்துக்கொண்டுள்ளார்.

170 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட பங்களாதேஷில் 12ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற திரு தாரிக் செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17) பிரதமராகப் பதவியேற்றார். அந்நாட்டில் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா என பெண் பிரதமர்களே ஆட்சி செய்து வந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்ஒருவர் பிரதமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகனான தாரிக் ரஹ்மான், லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளார். 

உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடான பங்களாதேஷ், அண்மைக் கால அரசியல் போராட்டங்களால் முதலீட்டாளர்களிடம் இழந்திருந்த நம்பிக்கையை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச்செல்லும் பணி நிதியமைச்சரான சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று முறை பிரதமராக இருந்த கலீதா ஜியாவின் அமைச்சரவையில் பணியாற்றிய சௌத்ரி, 2004ல் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமர் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியின்போது அவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

50 உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவையில், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் (BNP) மூத்த தலைவரும், இந்து சமூகத்தை சேர்ந்தவருமான நிதாய் ராய் சௌத்ரி, பௌத்த மதத்தைச் சேர்ந்த தீபன் திவான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர்களில் 17 பேர் புதிய முகங்கள்.

பங்களாதேஷில் 2024ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. பிப்ரவரி 12ஆம் தேதி நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் 300 இடங்களில் பிஎன்பி தலைமையிலான கூட்டணி 212 இடங்களை வென்றது. இதில் பிஎன்பி மட்டும் 151க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.

குறிப்புச் சொற்கள்