புதுடெல்லி: திபெத்திய மதபோதகர் தலாய் லாமாவின் சமய வாரிசு சீனாவைவிடுத்து வேறு நாட்டில் பிறப்பார் என அவர் எழுதிய புதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
தற்போது தலாய் லாமாவிற்கு 89 வயதாகிறது.
அவருடைய மரணத்திற்குப் பிறகும் உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் தலாய் லாமாவின் பெயரில் நடக்கும் அறப்பணிகள் தொடர வேண்டும் என விரும்புவதாக அவர் எழுதிய ‘வாய்ஸ் ஃபார் த வாய்ஸ்லெஸ்’ எனும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
அப்புத்தகம் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) வெளியானது.
தமது சமய வாரிசு வரிசை தன்னுடன் முடிவடையும் என அவர் முன்பு கூறியிருந்தார்.
ஆனால், தற்போது தமது சமய வாரிசு சுதந்திர உலகில் பிறப்பார் என்று முதன்முறையாகக் குறிப்பிட்டதை அவரது புத்தகம் குறிக்கிறது.
அவர் முன்பு திபெத்துக்கு வெளியே மறுபிறவி எடுக்க முடியும் என்று மட்டுமே கூறியிருந்தார். அவ்விடம் அவர் நாடுகடத்தப்பட்டு வசிக்கும் இந்தியாவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

