இந்தியா-நியூசிலாந்து இடையே வரலாற்றுபூர்வ வர்த்தக உடன்பாடு

2 mins read
85cc2fea-35f4-4266-85e0-8c149e4d2aa9
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் இவ்வாண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே வரலாற்றுபூர்வ தடையற்ற வர்த்தக உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை நியூசிலாந்தின் வர்த்தக, முதலீட்டு அமைச்சர் டோட் மெக்ளே திங்கட்கிழமை (டிசம்பர் 22) அறிவித்தார்.

இந்த உடன்பாட்டின்படி, நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரி 95 விழுக்காடு வரை குறையும்.

தொடக்கமாக, 57 விழுக்காடு இறக்குமதி வரிவிலக்கு இருக்கும். உடன்பாடு முழுமையாக நடப்புக்கு வந்த பின்னர் 82 விழுக்காடு வரி நீக்கப்படும். ஒப்புக்கொள்ளப்பட்ட 95 விழுக்காட்டில் எஞ்சிய 13 விழுக்காடு வரிக்குறைப்புக்கு தகுதிபெறும்.

இதனால், அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தின் ஏற்றுமதி ரூ.9,863 கோடியில் இருந்து ரூ.11,650 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அடுத்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியச் சந்தையில் நியூசிலாந்து 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் உடன்பாடு வழி ஏற்படுத்தும்.

வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம் நியூசிலாந்தில் வேலைவாய்ப்பும் ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும் என்று நியூசிலந்து பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்த இந்த உடன்பாடு கைகொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“உலகில் வேகமாக வளரும் பொருளியலைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புதிய உடன்பாட்டின்மூலம் நியூசிலாந்து வர்த்தகத்தை 1.4 மில்லியன் இந்தியர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகிறது.

“இதுபோன்ற புதிய வர்த்தக உடன்பாடுகள், நியூசிலாந்தின் பொருளியல் வளர்வதற்கும் நாட்டு மக்கள் முன்னேறுவதற்கும் உதவுகின்றன,” என்றும் அவர் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இதுவரை ஏற்படுத்திய தாராள வர்த்தக உடன்பாடுகளில் இதுவே ஆக அதிக அம்சங்களை உள்ளடக்கியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இவ்வாண்டு மார்ச் மாதம், நியூசிலாந்துப் பிரதமர் இந்தியா வந்திருந்தபோது தொடங்கியது. ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தடையற்ற வர்த்தக உடன்பாடு முழுவடிவம் பெற்றது.

அதற்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நியூசிலாந்துப் பிரதமரும் தொலைபேசியில் உரையாடினர். அதனைத் தொடர்ந்து தடையற்ற வர்த்தக உடன்பாடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த உடன்பாடு அடுத்த ஆண்டு அதிகாரபூர்வமாகக் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு நடப்புக்கு வந்த பின்னர் அதன் மீது ஓராண்டுக் காலம் மறுஆய்வு செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்