சோல்: அதிபர் யூன் சுக் இயோலை பதவியிலிருந்து தூக்கி எறிவதற்கான வாக்கெடுப்பை ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்காவிட்டால் வரலாறு மறக்காது என்று தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.
திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் சனிக்கிழமை (டிசம்பர் 14) இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) நடந்த முதல் வாக்கெடுப்பு திரு யூனுக்குச் சாதமாக அமைந்தது.
ஆளும் மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்ததால் அவரை பதவியில் இருந்து நீக்கும் முயற்சி தோல்வியடைந்தது.
இந்த நிலையில் முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஐந்து சிறிய கட்சிகளும் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை வியாழக்கிழமை அன்று தாக்கல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவிநீக்க வாக்கெடுப்பு உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.00) நடைபெறவிருக்கிறது.
இந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு 200 வாக்குகள் தேவை. அதாவது ஆளும் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் எதிர்க்கட்சிகளுக்கு சாதமாக வாக்களித்தால்தான் 200 வாக்குகள் கிடைக்கும்.
அதிபர் யூனை பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்துடன் அவர்மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சித் தலைவரான திரு லீ ஜே-மியூங், ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிபரை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டியது திரு யூனையோ அல்லது ஆளும் மக்கள் சக்தி கட்சியை அல்ல. உறையும் பனியில் போராடும் மக்களின் வாழ்க்கை காப்பற்றப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“தயவுசெய்து சனிக்கிழமை பதவிநீக்க வாக்கெடுப்பை ஆதரிக்க வேண்டும். வரலாறு நீங்கள் தேர்ந்தெடுத்த வாய்ப்பை என்றும் நினைவில் வைத்திருக்கும்,” என்று திரு லீ மேலும் தெரிவித்தார்.
கடந்த முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

