வெலிங்டன்: தென்பசிபிக் நாடான ஃபிஜியில் சென்ற ஆண்டு புதிதாக எச்ஐவி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 27 விழுக்காடு அதிகரித்ததை அடுத்து இந்நோய்த்தொற்றை அந்நாடு தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது.
அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு எச்ஐவி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. பெரியவர்களில் 60 பேரில் ஒருவருக்கு இந்நோய் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் 59 குழந்தைகள் எச்ஐவி தொற்றோடு பிறந்த நிலையில், 18 குழந்தைகள் தங்களின் முதல் பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழந்தன.
விரிவுபடுத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிந்ததாக அதிகாரிகள் கூறினர். எனவே, இலவசப் பரிசோதனை, தடுப்பு மருந்துகள், போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கான சிகிச்சைகளை விரிவாக்க ஃபிஜி திட்டமிட்டுள்ளது.
ஃபிஜியில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களில் 39 விழுக்காட்டினருக்கு மட்டுமே தங்களின் பாதிப்பு குறித்துத் தெரியும் என்றும் 22 விழுக்காட்டினரே சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
