ஹிஸ்புல்லா தலைவர் கொலை: கணக்கைத் தீர்த்துவிட்டதாக நெட்டன்யாகு கொக்கரிப்பு

3 mins read
3302d7a7-0b95-4a9f-808e-cc5e11354275
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட பின்னர் தெஹ்ரானில் உள்ள பாலஸ்தீன சதுக்கத்தில் ஒன்றுகூடிய மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: ஹிஸ்புல்லா தலைவரைக் கொன்றதன் மூலம் கணக்கைத் தீர்த்துவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்து உள்ளார்.

பெய்ரூட்டில் சனிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைமைச் செயலாளரான ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

அதன் பிறகு அறிக்கை வெளியிட்ட நெட்டன்யாகு, “ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்களையும் பல்வேறு வெளிநாட்டவரையும் கொன்று குவித்ததற்குப் பொறுப்பானவரைக் கொன்றதன் மூலம் கணக்கைத் தீர்த்துவிட்டோம்,” என்றார்.

1983ஆம் ஆண்டு சம்பவத்தை நினைவுபடுத்தி அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா இயக்கம் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் அமெரிக்க தூதரகத்தில் இருந்த 63 பேரும் படைமுகாம்களில் இருந்த அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த 241 வீரர்களுடன் 58 பிரெஞ்சுப் படையினரும் கொல்லப்பட்டனர்.

“நஸ்ரல்லாவைக் கொல்ல உத்தரவிட்டேன். இப்போது அவர் உயிருடன் இல்லை.

“இஸ்ரேல் தனது எதிரிகளுக்கு எதிரான போரில் வரலாற்றுபூர்வ திருப்புமுனையை அடைய வேண்டும் என்னும் உயரிய இலக்கைச் சாதித்து உள்ளது,” என்று திரு நெட்டன்யாகு தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

ஏறத்தாழ ஓராண்டாக நீடிக்கும் காஸா போர் தொடர்பான நெட்டன்யாகுவின் கொள்கை மீது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குறைகூறல்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வேளையில், இஸ்ரேல் தனது இலக்கை எட்ட ஹிஸ்புல்லா தலைவரைக் கொல்வது அவசியம் என்று திரு நெட்டன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

“நாம் வகுத்த இலக்கை அடையவும் வடபகுதிக் குடியிருப்பாளர்கள் தங்களது இல்லத்துக்குப் பாதுகாப்பாகத் திரும்பவும் இந்த நஸ்ரல்லாவைக் கொல்வது அவசியம்.

“அவரை ஒழிப்பது, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலின்போது பிணை பிடித்து காஸாவில் சிறை வைத்திருப்போரை மீட்பதற்கும் உதவும்,” என்று திரு நெட்டன்யாகு தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கும் இடையே நடந்த போரில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக வதந்திகள் எழுந்தன; ஆனால் எவ்விதப் பாதிப்புமின்றி நஸ்ரல்லா உயிருடன் இருப்பது பின்னர் தெரியவந்தது.

லெபனானில் தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல்

இதற்கிடையே, நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் பல்வேறு முகாம்கள் மீது புதிதாகத் தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) கூறியது. கடந்த சில மணி நேரங்களாக அந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

நஸ்ரல்லா கொன்று வீழ்த்தப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு வட்டாரத்தில் போரை விரிவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் இடைவிடாது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

ஆயுதங்களுடன் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பதுங்கி இருக்கும் கட்டடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

ஈரான் எச்சரிக்கை

இந்நிலையில், இஸ்ரேல் மீது போராளிக் குழுக்கள் நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் உதவிபுரியும் என்று ஈரான் நாடாளுமன்ற நாயகர் முகம்மது பாக்கர் குவலிபாஃவ் தெரிவித்து உள்ளார்.

பாலஸ்தீனிய குழுவான ஹமாஸ், லெபனானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா, ஏமனின் ஹுதி ஆகியவற்றுடன் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கி வரும் ஆயுதமேந்திய குழுக்களை உள்ளடக்கிய ‘ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்’ குழுவை மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

பல்லாண்டுகளாக ஈரானின் ஆதரவுடன் அந்தக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் போராளிக் குழுக்களுக்கு உதவ எந்த அளவுக்கு அதிகமான நடவடிக்கையிலும் இறங்க ஈரான் தயங்காது என்று திரு குவலிபாஃவ் கூறியுள்ளார்.

“இதுபோன்ற குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் அமெரிக்கா அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்,” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்