ஹாங்காங்கில் பிரபலம் ஒருவரின் படுகொலையின் தொடர்பில் அவருடைய முன்னாள் கணவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயதான ஏபி சோய் என்பவர் பிப்ரவரி 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. அவருடைய உடல் பாகங்களில் சில ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.
இதன் தொடர்பில் ஏபியின் முன்னாள் கணவர் அலெக்ஸ், அலெக்சின் பெற்றோர், அலெக்சின் அண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில நாள்களுக்கு முன்னர் ஏபி தன்னுடைய மகளை அழைக்க சென்றபோது அலெக்சின் அண்ணனும் அவருடன் சென்றுள்ளார். அவர் ஏபியை சுயநினைவு இழக்க செய்து அவரை ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த வீட்டில் ஏபி கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.
அந்த வீட்டை சோதனையிட்டதில் கத்தி, கை உறைகள், முகக்கவசங்கள், மாமிசம் வெட்டும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு துண்டுதுண்டாக வெட்டப்பட்ட மனித மாமிசமும் இரண்டு கலன்களில் சூப் இருந்ததையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். சூப்பில் மனித திசுக்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த குளிர்ப்பதன பெட்டியில் ஏபியின் துண்டிக்கப்பட்ட கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவருடைய உடல் பாகமும் தலையும் தேடப்பட்டு வருகிறது.
சொத்து குறித்து எழுந்த தகராறு காரணமாக ஏபி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கொலையை அலெக்சின் தந்தை திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.