விடுமுறைக் காலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் கோலாலம்பூரை விட்டு வெளியேறினர்

விடுமுறைக் காலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் கோலாலம்பூரை விட்டு வெளியேறினர்

2 mins read
cda68221-4ba7-4a59-99e8-e08d6e5fadc6
கோலாலம்பூரை விட்டு வெளியேறும் மக்களால் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவில் சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டும், ரமலான் நோன்பு காலம் தொடங்கியதாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோலாலம்பூரைவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

இதனால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் உள்ளிட்டவை ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மலேசியாவின் நெடுஞ்சாலை அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்திலும் அறிவிப்புகள் வெளியானது. கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலையில் உள்ள கெந்திங் செம்பா சுங்கச் சாவடியில் கடுமையான கூட்ட நெரிசல் இருப்பதை அது சுட்டியது.

அதேபோல் சனிக்கிழமை (பிப்ரவரி 14) வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தது. ரவாங்கில் இருந்து புக்கிட் பெருந்தோங் வரையும் ஸ்கூடாயில் இருந்து கூலாய் வரையிலும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

முக்கிய விரைவுச்சாலைகளின் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டதால் வாகனங்கள் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்க வேண்டியிருந்தது.

அதேபோல் இவ்வாரம் ஜோகூருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது 30 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஜோகூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி, சுல்தான் அபு பக்கர் சோதனைச்சாவடி ஆகியவற்றில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதிசெய்வதில் காவல்துறை கவனம் செலுத்தும் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் அப் ரஹ்மான் அர்ஷாத் கூறினார்.

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது வெளியூர்களுக்குச் செல்லும் மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் மட்டும் மலேசியச் சாலைகளில் 3.27 மில்லியன் வாகனங்கள் போக்குவரத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்