ஹாங்காங்: சான் யுக் டோங், தாம் பிறந்து வளர்ந்த சிறிய, நீல நிறச் செங்கல் வீடுகளின் வரிசையிலேயே வாழ்நாள் முழுதும் இருக்க விரும்பினார். ஆனால், 71 வயதான இவரின் ஹாங்காங் கிராமத்து வீடு, $36 பில்லியன் மதிப்பிலான பெரிய தொழில்நுட்ப நடுவத்திற்கு வழிவிடுவதற்காக விரைவில் இடிக்கப்படவுள்ளது.
கிராமங்கள், இயற்கை ஈரநிலம், விவசாய நிலம் உட்பட ஹாங்காங்கின் பரப்பளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி, வட பெருநகரமாக மாற்றப்பட்டு வருகிறது. இது சீனாவுடன் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதையும் பொருளியலைப் பல்வகைப்படுத்துவதையும் புதிய வீடுகள் வழங்குவதையும் இலக்காகக் கொண்ட கனவுத் திட்டம்.
“எனக்கு இங்கிருந்து வெளியேற மனமில்லை. அரசாங்கம் இந்தப் பகுதியை மேம்படுத்தாமல் இருந்திருந்தால், நான் எனது எஞ்சிய வாழ்க்கையை இங்கேயே கழித்திருப்பேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் இந்த இடத்தைச் சேர்ந்தவன்,” என்று சான் கூறினார். வீட்டின் முற்றத்தில் பொருள்களை எல்லாம் மூட்டை கட்டிப் புறப்பட அவர் தயாரானார்.
ஹாங்காங்கை மக்காவுடனும் சீனாவின் ஒன்பது நகரங்களை உள்ளடக்கிய ‘கிரேட்டர் பே ஏரியா’வுடனும் இத்திட்டம் மிகவும் நெருக்கமாக இணைக்கும். ஏறக்குறைய 2.5 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கவும் 650,000 வேலைவாய்ப்புகளை வழங்கவும் கூடிய புதிய பொருளியல் இயந்திரமாக இந்தப் பகுதி விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஆனால், ஹாங்காங்கில் சிலிக்கான் வேலி போன்ற உயர் தொழில்நுட்ப நடுவத்தை உருவாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் பார்வை, நகரத்தின் வனவிலங்குகள், உள்ளூர்ச் சமூகங்கள், பொது நிதி முதலியவற்றுக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும் என்று சுற்றுப்புற, சமூக அமைப்புகள் எச்சரித்துள்ளன.
“முன்பு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட ஓர் இடத்தில் நீங்கள் புதிய நகரமொன்றைக் கட்டினால், அதை நீங்கள் எவ்வாறு குறைக்க முயன்றாலும், அது மிகவும் அழிவுகரமானதாகவே இருக்கும்,” என்று நிலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் லிபர் ஆய்வுச் சமூகத்தின் பிரையன் வோங் கூறினார்.
“இவ்வளவு பெரிதாகக் கட்ட வேண்டுமா? இது மிகப் பெரிய லட்சியமா?,” என்றும் அவர் வினவினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வட பெருநகரத் திட்டம், இறுதியில் 30,000 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதற்கு வழிவிடுவதற்காகக் குறைந்தது 25 கிராமங்களாவது இடிக்கப்படும் என்று லிபர் தெரிவித்தது.
கிராமப்புறப் பகுதிகளை இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசாங்கத் துறைகள் கூறின. ஆனால் சானின் முன்னோரின் வீடுகள் பாதுகாக்கப்படும் அளவுக்குக் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்றும் அவை குறிப்பிட்டன.
ஹாங்காங்கைச் சீனத் தலைநிலத்துடன் ஒருங்கிணைக்கும் திட்டங்களுக்கு, முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இங்கு நீண்டகாலமாகவே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் நகரத்தின் தன்னாட்சியைப் பறிக்கும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் மிகப் பெரிய ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் பெய்ஜிங் ஹாங்காங் மீது திணித்த விரிவான தேசியப் பாதுகாப்புச் சட்டம், இந்த நிதி நடுவத்தில் எழுந்த எதிர்ப்புகளை முடக்கியுள்ளது.

