ஹண்டா கிருமி மரணங்களுக்குப் பிறகு ஹோண்டியஸ் பயணம் மீண்டும் தொடக்கம்

ஹண்டா கிருமி மரணங்களுக்குப் பிறகு ஹோண்டியஸ் பயணம் மீண்டும் தொடக்கம்

2 mins read
ebaf73ac-415e-4b12-9ba7-cd934a7034b5
ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் அமைந்துள்ள கிரனாடில்லா டி அபோனா துறைமுகத்தில், மே 11ஆம் தேதியன்று நங்கூரமிட்டிருந்த எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலை நோக்கிப் பாதுகாப்பு உடைகள் அணிந்த அதிகாரிகள் நடந்து செல்கின்றனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

தி ஹேக்: ஹண்டா கிருமிப் பரவல் காரணமாக உலகளாவிய சுகாதார எச்சரிக்கையைத் தூண்டிய ஒரு சொகுசுக் கப்பல், சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சனிக்கிழமையன்று (மே 30) மீண்டும் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

“பொதுச் சுகாதாரக் கண்ணோட்டத்தில், ஹோண்டியஸ் கப்பலை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கு இனி எந்தத் தடைகளும் இல்லை,” என்று நெதர்லாந்தின் ராட்டர்டாம் துறைமுகத்தில் உள்ள பொதுச் சுகாதார நிறுவனம், வெள்ளிக்கிழமையன்று நடந்த இறுதி ஆய்வைத் தொடர்ந்து கூறியது.

இந்தச் சோதனைகளின் போது, ​​”ஹோண்டியஸ் கப்பல் திறம்பட சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்ட வழிகாட்டுதல்களின்படி கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொற்றுக்கட்டுப்பாட்டு நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்,” என்று ஓர் அறிக்கை தெரிவித்தது.

எம்.வி. ஹோண்டியஸ் கப்பலின் உரிமையாளரான ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ், ஆய்வுகள் முடிந்தவுடன் ஹோண்டியஸ் கப்பல், ராட்டர்டாமிலிருந்து புறப்படும் என்றும் ஜூன் 13ஆம் தேதி முதல் அதன் பயண அட்டவணையை மீண்டும் தொடங்கும் என்றும் இந்த வாரம் கூறியது.

ஹண்டா கிருமிப் பரவலைத் தொடர்ந்து மூன்று பயணிகள் இறந்ததால், ஹோண்டியஸ் கப்பலின் பயணம் தடைபட்டபோது, ​​அது அர்ஜென்டினாவின் உஷுவாயாவிலிருந்து கேப் வெர்டேவுக்குச் சென்று கொண்டிருந்தது. எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பு, செயின்ட் ஹெலினா தீவில் சில பயணிகள் கப்பலை விட்டு வெளியேறிவிட்டனர்.

ஹண்டா கிருமி என்பது கொறித்துண்ணிகளால் பரவும் ஓர் அரிய வகை கிருமி. இதற்கு தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ இல்லை.

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள டெனரிஃப் தீவில் கப்பலில் இருந்து பெரும்பாலான பயணிகள் இறக்கப்பட்டு, பின்னர் விமானம் மூலம் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

டச்சு கொடி ஏற்றப்பட்ட அந்தக் கப்பல், ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகமான ராட்டர்டாமை மே 18ஆம் தேதியன்று வந்தடைந்தது. அங்கு கப்பலில் எஞ்சியிருக்கும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

உலகச் சுகாதார நிறுவனம், உயிரிழந்த மூன்று பேர் உட்பட, இந்த நோய்ப் பரவலுடன் தொடர்புடைய 13 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை இன்றுவரை பதிவு செய்துள்ளதாக ஏஎஃப்பி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
கப்பல்கிருமிதுறைமுகம்