தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டிறுதிப் பயணம் அவர்களின் இறுதிப்பயணம்

2 mins read
தேனிலவுத் தம்பதி, 9 பேர் கொண்ட குடும்பம் - வீடு திரும்பவில்லை
c80e649d-ce33-46e6-b21f-ea62457811a5
உறவினரைப் பறிகொடுத்து அழுது புலம்பிய மாது. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரிய விமான விபத்தில் பலியானோரைப் பற்றிய தகவல்கள் பதற வைக்கின்றன.

அந்த விபத்தில் மாண்டவர்களில் ஆக வயதானவர் 79 வயது முதியவர். அவர் தமது மனைவி, இரு மகள்கள், ஒரு மருமகன், ஒரு பேத்தி, மூன்று பேரன்கள் என ஒன்பது பேர் பேங்காக் சென்று திரும்பியபோது அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

உயிரிழந்த 175 பயணிகளில் 103 பேர் குறைந்தபட்சம் 50 வயதுடையவர்கள். 14 பேர் 20 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியர். அவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்.

டிசம்பர் 13ஆம் தேதி மணமுடித்த புதுமணத் தம்பதியர் பேங்காக்கிற்கு தேனிலவு சென்றவர்கள் திரும்பவில்லை.

இன்னும் சில மாதங்களில் மணக்கோலம் காண இருந்து 32 வயதுப் பெண்ணும் மாண்டவர்களில் ஒருவர்.

தமது இரு மகன்களுடன் பேங்காக் சுற்றுலா சென்றிருந்த தந்தையும் பிள்ளைகளுடன் மாண்டார். அவர்களில் மூத்த மகனுக்கு அண்மையில் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி கிடைத்ததை அந்தக் குடும்பம் கொண்டாடி மகிழ்ந்திருந்தது.

தென்கொரியாவின் குவாங்ஜுவைச் சேர்ந்த பெண் செய்தியாளரும் தமது கணவருடன் அந்த விமானத்தில் சென்றிருந்தார். அவரது நிறுவனம் அவருக்கு அந்த விடுமுறைப் பயணத்தை அன்பளிப்பாக தந்திருந்தது. பேங்காக் வானிலை இதமாக இருப்பதாக இன்ஸ்டகிராமில் பதிவுசெய்த சில மணி நேரங்களில் விபத்தில் கணவருடன் சிக்கி மாண்டார்.

புற்றுநோயில் இருந்து மீண்ட 50 வயதுப் பெண்ணும் தமது சுற்றுப் பயணத்தில் பிழைக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் தேனிலவுக்குச் சென்ற பின்னர் முதல்முறையாக அவர் விமானத்தில் சென்றிருந்தார்.

கோ என்னும் பெயருடைய 43 வயது ஆடவர் தமது மனைவி, மூன்று வயது மகனுடன் பேங்காக் சுற்றுலா சென்றிருந்தார். தமது மகனுக்கு முதல் வெளிநாட்டு விமானப் பயணம் என்று மகிழ்வுடன் மகனின் விமானப் பயணப் படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்ட அவர், குடும்பத்துடன் உயிரிழந்துவிட்டார்.

ஆண்டிறுதி சுற்றுப்பயணம் அவர்களின் இறுதிப்பயணமாக அமைந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்