ஹாங்காங்: ஜப்பான், ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் திறந்துவிடுவதைத் தான் வன்மையாக எதிர்ப்பதாய் ஹாங்காங் தலைவர் கூறியிருக்கிறார்.
ஜப்பானியக் கடலுணவின் தொடர்பில் ஹாங்காங் உடனடியாகக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை ஜப்பான் மில்லியன் டன்னுக்கும் மேலான நீரைக் கடலுக்குள் திறந்துவிடப்போகிறது. அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்று ஜப்பான் கூறுகிறது.
2011ஆம் ஆண்டு நேர்ந்த ஆழிப் பேரலைப் பேரிடரின்போது அந்த ஆலை அழிந்துபோனது. அப்போது சேதமுற்ற அணு உலைகளுக்குக் குளிரூட்டுவதற்காக அந்த நீர் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாட்டு நிறுவன அணுசக்தி அமைப்பு அந்நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், நீரைக் கடலுக்குள் திறந்துவிடுவதற்கான திட்டத்திற்கு உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் அக்கறைகளால், சீனா உட்பட உள்ளூரிலும் வெளியூரிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது பொறுப்பற்ற செயல் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ கூறினார். உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் சீர்ப்படுத்த முடியாத அளவுக்குக் கடல் சுற்றுச்சூழல் மாசடைந்து அழிந்துபோகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.