ஹாங்காங்: சிங்கப்பூர், துபாய் விமான நிலையங்களுக்குப் போட்டியாக ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் தனது இரண்டாவது முனையத்தை புதன்கிழமைய (மே 27) அதிகாரபூர்வமாகத் திறந்தது.
ஹாங்காங் விமான நிலையம் கையாளக்கூடிய ஒட்டுமொத்த பயணிகள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100 மில்லியனாக உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட 14.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
ஹாங்காங் நேரப்படி அதிகாலை 5 மணி முதல் பயணிகள் இந்த முனையத்துக்குச் செல்லத் தொடங்கினர். அங்கிருந்து சீனாவின் ஷாங்காய் நோக்கிப் புறப்பட்ட ‘ஹாங்காங் ஏர்லைன்ஸ்’ விமானம், புதிய முனையத்தின் முதல் விமானச் சேவையாகப் பதிவானது.
இந்த முனையம் முதற்கட்டமாக ஏர் ஏசியா, இண்டிகோ உள்ளிட்ட 15 மலிவு விலை விமான நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம், முனையம் 1ல் கேத்தே பசிபிக் போன்ற முதன்மை விமான நிறுவனங்களுக்கான இடவசதி தாராளமாகக் கிடைக்கும்.
செயற்கை நுண்ணறிவு, மனித இயந்திரவியல், முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் உலகின் மிக நவீன மின்னிலக்க முனையமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகள் வரை கையாள முடியும். ஈரான் போர் காரணமாகத் துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு பயணப் பாதைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பாதிப்பைப் பயன்படுத்தி, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற ஆசிய விமான நிலையங்கள் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தப் போட்டியிட்டு வருகின்றன.
ஹாங்காங் விமான நிலைய விரிவாக்கத்தின் மற்றொரு பகுதியாக, அதன் மூன்றாவது ஓடுதளமும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

