ஹாங்காங்: ஹாங்காங்கின் தலைவர் நிர்வாகி ஜான் லீ, ஹாங்காங்கிற்கான முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் புதன்கிழமை (செப்டம்பர் 16) வெளியிட்டுள்ளார்.
குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அனைத்துலக நிதி நடுவமாகத் தனது நிலைபாட்டை உறுதிப்படுத்திக்கொள்வதில் அந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
சீனாவுடனான தொழில்நுட்ப உறவை வலுப்படுத்துவதும் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பாளர்கள் எனப் பல தரப்புகளுடன் இரண்டு மாதங்களுக்கு நடத்தப்பட்ட அரசாங்கக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஹாங்காங்கிற்கான திட்டம் வரையப்பட்டது.
பொருளியல், வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் போன்ற பல அம்சங்களைத் திட்டம் உள்ளடக்கி இருக்கிறது.
ஹாங்காங்கில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 196,000 பொது வீடுகள் கட்டித்தரப்படும் என்று திரு லீ வாக்குறுதியளித்தார்.
நிலப் பற்றாக்குறை காரணமாக வீடு வாங்குவது பலருக்கு எட்டாக் கனியாக இருந்துள்ளதைச் சுட்டிய திரு லீ, இளையர்கள் பலர் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்று ஊக்குவித்தார்.
கொள்கை இலக்குகளை முன்வைத்துப் பேசிய திரு லீ, ஹாங்காங் அதிகாரபூர்வமாக 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்திற்கான முதல் மத்திய தீர்வு, பரிவர்த்தனை அமைப்பைத் தொடங்கும் என்று கூறினார்.
மேலும், ஹாங்காங்கின் நாணய ஆணையம், இவ்வாண்டின் இறுதிக்குள் மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை முறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹாங்காங்கின் நிதி, கடல்சார், வர்த்தகத் துறைகளைப் பலப்படுத்துதல், தகவல், தொழில்நுட்ப முயற்சிகளை விரைவுபடுத்துதல், உலகளாவிய வெளிநாட்டு ‘ரென்மின்பி’ மையமாக அதன் பங்கை வலுப்படுத்துதல் ஆகியவை ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் அடங்கும்.
ஹாங்காங், முக்கிய இணைப்புப் பாலமாகச் செயல்படும் என்றும் சீனாவின் ‘கிரேட்டர் பே’ வட்டாரத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் திரு லீ கூறினார்.
