ஹாங்காங்: ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புக் காவல்துறை, வெளிநாடுகளில் வாழும் 19 ஆர்வலர்களுக்குக் கைதாணை பிறப்பித்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதாக ஹாங்காங்கின் கடுமையான தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுகுறித்து இத்தனை பேருக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
கைதாணை பிறப்பிக்கப்பட்ட ஆர்வலர்கள், ‘ஹாங்காங் பார்லிமென்ட்’ (Hong Kong Parliament) என்றழைக்கப்படும் குழுவை நடத்தியது அல்லது அதில் பங்கேற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது அக்குழுவின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெய்ஜிங் 2020ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. 2019ல் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் பல மாதங்கள் நீடித்ததைத் தொடர்ந்து சீனாவில் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
கைதாணை பிறப்பிக்கப்பட்ட ஆர்வலர்கள், கருத்துளக்கணிப்பை நடத்தினர் அல்லது அதிகாரபூர்வமற்ற ‘ஹாங்காங் பார்லிமென்ட்’ குழுவில் போட்டியிட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சுய ஆட்சி முறையை உருவாக்கி ஹாங்காங் அரசியலமைப்பு சட்டத்தை வரைவது அக்குழுவின் இலக்கு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கைதாணை பிறப்பிக்கப்பட்ட 19 பேரைப் பிடிக்க உதவுவோருக்கு வெகுமதியாக 200,000லிருந்து ஒரு மில்லியன் ஹாங்காங் டாலர் (32,644 - 167,000 வெள்ளி) வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.