ஹாங்காங்: ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளரும் ஊடகத் தொழிலதிபருமான ஜிம்மி லாய், குற்றவாளி என டிசம்பர் 15ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வெளிநாட்டு கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் தேசத் துரோக வெளியீடுகளை வெளியிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தற்போது மூடப்பட்டுள்ள ஆப்பிள் நாளேட்டின் நிறுவனரான ஜிம்மி லாய் 2020ஆம் ஆண்டிலிருந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரது கைது, அரசியல் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என பரவலாக விமர்சிக்கப்பட்டது.
2019ல் ஜனநாயக ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மோசமான வன்முறைகளில் முடிந்ததால் பெய்ஜிங், தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தியது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், ஹாங்காங் அல்லது சீனாவுக்கு எதிராக தடைகள், விரோத நடவடிக்கைகள் விதிக்க வேண்டும் என்ற இரண்டு வெளிநாட்டுச் சதிக்கு 78 வயது லாய் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறினர்.
மேலும் அவர் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி வெளியீடுகளை வெளியிட்டு தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாகவும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்தர் டோ, “சீனா மீது லாய்க்கு பல ஆண்டுகளாக வெறுப்பு இருந்ததில் சந்தேகமில்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
வெளிர் பச்சை நிற மேல் சட்டை அணிந்திருந்த லாய் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது பேசவில்லை.
அவருக்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
பின்னர் ஒரு தேதியில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது.

