ஹாங்காங்: ஆண்களைக் காதல் வலையில் சிக்கவைக்க, வன்போலி (deepfake) தொழில்நுட்பத்தைக் கையாண்ட மோசடிக் கும்பல் ஒன்றை ஹாங்காங் காவல்துறையினர் முதன்முறையாக முறியடித்துள்ளனர்.
சமூக ஊடகங்கள்வழி அணுகி, பின்னர் காணொளி அழைப்புகளின்போது தங்களது முகத்திற்குப் பதிலாகக் கவர்ச்சியான பெண்களின் முகத்தை மோசடிக் கும்பல் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட முகங்கள் அவை என்பதைப் பாதிக்கப்பட்டோர் உணரவில்லை.
சிங்கப்பூர் உட்பட வட்டார நாடுகள் பலவற்றில் இருக்கும் ஆண்களை ஏமாற்றி 360 மில்லியன் ஹாங்காங் டாலரைக் (S$60.7 மில்லியன்) கும்பல் மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உட்பட 27 பேரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறையினர் அக்டோபர் 14ஆம் தேதி தெரிவித்தனர்.
மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதற்காக ஆண்களை ஈர்க்க, போலி வர்த்தகத் தளங்களை உருவாக்க மோசடிக் கும்பல் இந்தப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளை அமர்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர், இந்தியா, ஹாங்காங், சீனா, தைவான் உட்பட மேலும் பல நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் பலர் மோசடிக் கும்பல் விரித்த வலையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வன்போலி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய ஹாங்காங் மோசடிக் கும்பல் ஒன்றை அதிகாரிகள் முறியடித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கும்பல் 4,000 சதுர அடி தொழில்துறைப் பகுதி ஒன்றில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அதன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.
ஆட்களை வேலைக்குச் சேர்ப்பதில் கும்பல் ஈடுபட்டபோது மின்னிலக்க ஊடகத் துறை பட்டதாரிகளையும் அது நாடியது.
மோசடியை நடத்துவதற்காகக் கும்பல் பயிற்சியும் அளித்ததாகக் கூறப்படுகிறது.