ஹாங்காங்: இதுவரை இல்லாத வகையில் கடுமையாக வீசவிருக்கும் ரகாசா புயலை முன்னிட்டு ஹாங்காங் அதன் பள்ளிகளை மூடியதுடன் விமானச் சேவைகளையும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) ரத்துச் செய்துள்ளது.
வலுவான ரகாசா புயல் மக்களை அச்சுறுத்தி வீடுகளுக்குக் கடுஞ்சேதம் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்குமுன் பிலிப்பீன்ஸின் வட பகுதியைக் கடந்த ரகாசா புயல் மரங்களை வேரோடு சாய்த்தது, கட்டடங்களின் கூரைகளைப் பிய்த்தெரிந்தது. புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஆயிரக்கணக்கானோர் பள்ளிகளிலும் நிவாரண நிலையங்களிலும் தஞ்சமடைந்தனர்.
மேற்கு நோக்கி நகர்ந்த ரகாசா புயல் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.
கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் வாழும் ஹாங்காங், புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சந்திக்க முன்னெச்சரிக்கையாகத் தயாரானது.
அதற்கு அருகில் உள்ள ஷென்சென் நகரில் 400,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
மனிதர்களின் செயல்களால் உருவான பருவநிலை மாற்றம் உலக வெப்பமயமாதலை மோசமாக்கியுள்ளதால் புயல்கள் மேலும் வலுவாகிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஹாங்காங்கின் விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டாலும் செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை பல விமானச் சேவைகளில் தடங்கல் ஏற்படும் என்று விமான நிலையம் குறிப்பிட்டது.
500க்கும் அதிகமான கேத்தே பசிபிக் விமானங்கள் ரத்துச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங் வானிலை ஆய்வகம் 8ஆம் நிலை எச்சரிக்கையை செப்டம்பர் 23ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் வெளியிட்டது. அதையடுத்து வர்த்தகங்களும் பெரும்பாலான போக்குவரத்தும் மூடப்பட்டன.
ஷென்சென்னில் உள்ள அவசர நிர்வாக அதிகாரிகள், அவசர மீட்பு அதிகாரிகளையும் இதர அதிகாரிகளையும் தவிர வீட்டைவிட்டு யாரும் வெளியேறவேண்டாம் என்று எச்சரித்தனர்.

