ஹாங்காங்: சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஷென்சென் நகரம் ஹாங்காங்வாசிகளுக்குத் தங்கள் பணப்பையில் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு பொருள்களை வாங்கும் இடமாகவும் உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கான புகலிடமாகவும் உள்ளது. சிங்கப்பூரர்களுக்கு ஜோகூர் பாரு போல் ஹாங்காங்கில் வசிப்பவர்களுக்கு ஷென்சென் நகரம் மாறி வருகிறது.
உணவகங்களுக்காவும் கடைத்தொகுதிகளுக்காவும் மட்டும் அவர்கள் அங்கு செல்வதில்லை. பல் மருத்துவ சிகிச்சை, சுகாதாரப் பரிசோதனை, சிறப்பு சிகிச்சை, அறுவை சிகிச்சை வரையிலான அனைத்துச் சுகாதார சேவைகளுக்காகவும் ஷென்சென் நகரருக்குச் செல்லும் ஹாங்காங் வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஹாங்காங்கை விட ஷென்செனில் 10 மடங்கு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாக 44 வயது ஹாங்காங்வாசி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
மேலும், அண்மை காலமாக தன் நண்பர்களின் பெற்றோர்கள் பலர் மருத்துவத் தேவைக்கு ஹாங்காங் மருத்துவர்களை விடுத்து ஷென்சென் நகரில் இருக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
ஹாங்காங்வாசிகள் சொந்த நாட்டிலேயே அதிக மானியத்துடன் கூடிய பொது மருத்துவச் சேவையை அனுபவிக்க முடியும். ஆனால், மருத்துவர்கள் பற்றாக்குறை, மூத்தோரின் மக்கள்தொகை அதிகரிப்பு போன்றவற்றால் அவசர சிகிச்சைத் தேவைப்படாத நோயாளிகள் ஒரு நிபுணரை அணுகுவதற்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டிய சூழல் அங்கு நிலவுகிறது.

