ஹாங்காங்: முன்னாள் ஜனநாயக ஆர்வலர்கள் 45 பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்டுள்ள ஆகப் பெரிய வழக்கில் சட்ட வல்லுநர் பென்னி டாய்க்கு ஆக அதிகமாக பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பெய்ஜிங் அந்தச் சட்டத்தை அமல்படுத்தியது.
அதற்கு முந்தைய ஆண்டு பேரளவிலான ஆர்ப்பாட்டங்களை ஜனநாயக ஆர்வலர்கள் நடத்தினர். சில நேரங்களில் அந்த ஆர்ப்பாட்டங்களில் வன்செயல்களும் நிகழ்ந்தன.
இதன் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 45 பேரில், அவ் நொக்-ஹின், ஆண்ட்ரூ சியு, பென் சுங், ஆஸ்திரேலியர் கார்டன் இங் ஆகியோர் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி அவர்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இளம் ஆர்வலர் ஜோஷுவா வோங்கிற்கு நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்டனை ஹாங்காங்கில் அரசியல் எதிர்ப்பை ஒடுக்கும் என்றபோதும் மேற்கத்திய நாடுகளின் கண்டனத்தைப் பெறும் என்று கருதப்படுகிறது.
ஏற்கெனவே, இவ்வழக்கு ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று அமெரிக்கா சாடியது. சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஹாங்காங்கில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் மீது விசா தடை விதிக்கப்படும் என்றும் அது சூளுரைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரு டாயும் திரு வோங்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், அரசாங்கத்தைக் கீழறுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆர்வலர்கள் 47 பேரில் அடங்குவர்.
2020ஆம் ஆண்டு அதிகாரபூர்வமற்ற முதற்கட்ட வாக்களிப்பை அவர்கள் நடத்தினர். அதில் 600,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கலந்துகொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். இது அரசாங்கத்தை முடக்கும் சட்டவிரோத முயற்சியின் ஓர் அங்கம் என்று ஹாங்காங் அதிகாரிகள் கூறினர்.
சீன அரசாங்கமும் இதைக் கண்டித்தது.
2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை, ஹாங்காங் நகரில் அரசியல் எதிர்ப்பை முற்றிலுமாக ஒடுக்கியது. குற்றம்சாட்டப்பட்ட பலருக்கும் பிணை மறுக்கப்பட்டது.

