தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்,ஸ்கூட்,கெத்தே பசிஃபிக் சேவை ரத்து

ஹாங்காங்கில் ‘ரகாசா’ சூறாவளி, பல விமான சேவைகள் ரத்து

2 mins read
74ba95a8-49fd-4a8e-9530-c22ff2148861
சாங்கி விமான நிலைய நான்காம் முனையம் அருகே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்கள் - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்காங்கை நெருங்கிவரும் ‘ரகாசா’ எனப் பெயர்கொண்ட சூறாவளியை தவிர்ப்பதற்காக, பல விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் செப்டம்பர் 23 (செவ்வாய்க்கிழமை) இரவு 8மணி முதல் செப்டம்பர் 25 (வியாழக்கிழமை) காலை 8மணி வரை 36 மணிநேரத்துக்கு மூடப்படுகிறது என்று குவான்டாஸ் விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே அந்நகருக்குச் செல்லவும் அங்கிருந்து வெளியேறவும் சேவைகள் வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அதன் மலிவுக் கட்டண விமானமான ஸ்கூட், ஹாங்காங்கின் தேசிய விமானமான கெத்தே பசிஃபிக் ஆகியன குறிப்பிடப்பட்ட அந்த நாள்களில் அவற்றின் சேவைகளை ரத்து செய்துள்ளன.

ஹாங்காங் அருகில் உள்ள தென்சீன நகரான ஷென்செனுக்குச் செல்லும் எஸ்ஐஏ விமானங்களும் ரத்தாகின. கெத்தே பசிஃபிக்கின் 500க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய இரு விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் அறிக்கை வழியாக மன்னிப்பு கோரியுள்ளன. பயணிகளை அவை நேரடியாக தொடர்புகொண்டு மாற்று திட்டங்களை வழங்கவிருக்கின்றன.

பயணங்களை மேற்கொள்ள விரும்பாதோருக்கு முழு கட்டணமும் திரும்பத் தரப்படும் என்று ஸ்கூட் தெரிவித்தது. பயன்படுத்தப்படாத பயண டிக்கெட்டுகளைக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி எஸ்ஐஏ அதன் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

ஹாங்காங் நகரைத் தவிர்த்து, அவற்றின் மற்ற வட்டாரங்களுக்கான விமானப் பயணங்களும் பாதிக்கப்படலாம் என இரு நிறுவனங்களும் மேலும் தெரிவித்துள்ளன. தைவானின் சைனா ஏர்லைன்ஸ் நிறுவனம் செப்டம்பர் 23ஆம் தேதி தைவானுக்குள் செல்லவும் அங்கிருந்து வெளியேறவும் இயங்கும் அதன் சேவைகளை ரத்து செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்