ஹாங்காங்: ஹாங்காங் டிராம் வண்டியில் மாது ஒருவர் படுக்கையை எடுத்துச் செல்லும் காட்சி பொதுமக்களிடையே பொதுப் போக்குவரத்தில் எவற்றையெல்லாம் எடுத்துச் செல்லலாம் என்ற பெருத்த விவாதத்தை எழுப்பியுள்ளது.
அந்தக் காட்சியில் மாது ஒருவர் ரயில் கைப்பிடியைப் பிடித்தவாறே டிராம் வண்டி ஓட்டுநருக்கு அருகே உள்ள வெற்றிடத்தில் தான் கொண்டுவந்த பெரிய படுக்கைமீது சாய்ந்தவாறு நிற்பதைக் காண முடிகிறது.
ஹாங்காங் டிராம்வேய்ஸ் நிறுவனம் அந்த மாது ஹேப்பி வேலி என்ற இடத்திலிருந்து கென்னடி டவுன் என்ற இடத்துக்கு மே மாதம் 14ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிவாக்கில் பயணம் செய்ததாக கூறியது.
பின்னர் மற்றொரு பயணி அந்த மாது பயணிகளின் பாதையை இடைமறிப்பதாகக் கூறியபின் அந்த மாது டிராம் வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டார் என்று கூறப்படுகிறது.
பயணிகள் எத்தகைய கனமான பொருள்களை ரயில், டிராம் வண்டி, பேருந்து, படகு போன்றவற்றில் எடுத்துச் செல்லலாம் என சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் அது தொடர்பான விதிமுறைகளைப் பட்டியலிட்டது.
டிராம் வண்டிகளில் பயணம் செய்வோர் செடிகள், வீட்டின் கூரைச் சுவர் வரை நீளும் உயரமான மரங்கள், மிகப் பெரிய படச் சட்டங்கள், தள்ளுவண்டி குப்பைக் கலன்கள், அவ்வப்போது குளிர்பதனப் பெட்டி என ஏற்றிச் செல்வதை பல இணைய பயன்பாட்டாளர்கள் குறைந்தது ஒரு முறையாவது பார்த்திருப்பர் என்று கூறப்படுகிறது.
எம்டிஆர் எனப்படும் ரயில் போக்குவரத்துக் கழக விதிமுறைகளின்படி, பயணிகள் ஒரு பெரிய பெட்டியை அல்லது ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் பல சிறிய பொருள்களை மட்டுமே எடுத்துச் செல்லலாம்.
அத்துடன் அந்தப் பயணப் பெட்டியின் ஒட்டுமொத்த நீளம், சுற்றளவு, உயரம் போன்றவை 1.7 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதில் எந்தவொரு பக்கமும் 130 சென்டிமீட்டருக்கு மேல் போகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பயணிகள் கொண்டு வரக்கூடிய சைக்கிள்கள் மடித்து வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது விதிகளுக்கு ஏற்ப முன்சக்கரம் தனியாக கழற்றப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

