ஹாங்காங்: சீனாவின் நிதி நடுவமாக விளங்கும் ஹாங்காங்கில் பல ஆண்டு பழைமையான பாலியல் குற்றச்சட்டங்களின்படி கடுமையான தண்டனை விதிக்கப்படுவதில்லை.
அண்மையில் நடந்த ஒரு பாலியல் தொடர்பான வழக்கில் எந்தத் தண்டனையும் இன்றி குற்றவாளி தப்பியிருப்பது அதற்கு சான்றாகும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஜெஸ்ஸி (உண்மைப் பெயர் அல்ல), ஒரு கோடை காலத்தில் தனக்கு அறிமுகமான ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது பயத்தால் எதுவும் செய்யமுடியாமல் அப்படியே உறைந்துபோனதாகத் தெரிவித்தார்.
அந்த வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு எதிராக ஜெஸ்ஸி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். ஆனால், தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிய அவருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.
பல ஆண்டுகாலப் பழைமையான சட்டங்களின்கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
“அப்போது நீங்கள் ஏன் அவரைத் திருப்பித் தாக்கவில்லை, கடிக்கவோ அல்லது அடிக்கவோ செய்யவில்லை என்று தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் என்னிடம் கேட்டார்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் ஆதங்கத்துடன் ஜெஸ்ஸி கூறினார்.
அச்சத்தின் காரணமாகத் தம்மால் அந்தத் தாக்குதலை எதிர்க்க முடியவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கவில்லை.
இருந்தாலும் “அந்தப் பெண் அதற்குச் சம்மதித்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் உண்மையாகவோ அல்லது தவறாகவோ நம்பியிருக்கலாம்,” என்று கூறிய நீதிபதி அந்த நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார்.
பல நாடுகளில் பாலியல் குற்ற வழக்குகளில் வார்த்தைகள் மூலமாக அல்லது எழுத்துபூர்வமாக வெளிப்படையாகச் சம்மதம் தெரிவிக்காமல், செயல்கள் அல்லது சூழ்நிலைகள் மூலம் சம்மதித்ததாகக் கருதுவது சட்டபூர்வமான வாதங்களாகப் பயன்படுத்த முடியாது.
இந்த நிலையில் ஹாங்காங், பாலியல் தொடர்பான குற்றச்செயல் சட்டங்களை முழுமையாக மாற்றியமைக்க முற்பட்டுள்ளது. அதற்கான விரிவான சீர்திருத்தங்கள் குறித்துப் பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்கும் நடைமுறையை அது இம்மாதம் தொடங்கியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சீர்திருத்தங்கள், பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

