மத்திய கிழக்கு அமைதிக்கான நம்பிக்கை வலுப்பெற்றது

மத்திய கிழக்கு அமைதிக்கான நம்பிக்கை வலுப்பெற்றது

2 mins read
போர்நிறுத்தம் குறித்து லெபனான், இஸ்ரேல் பேச்சுவார்த்தை
48f6ef87-a721-4efd-ab4e-da328e1e4186
வடக்கு இஸ்ரேலில், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பீரங்கி வாகனங்களுக்கு அருகில் இஸ்ரேலிய வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்/ஜெருசலம்: மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அதிகரித்தது. டெஹ்ரானில் உள்ள முக்கியப் பாகிஸ்தான் சமரசப் பேச்சாளர் ஒருவரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகத்தினரும் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

ஈரான் ஆதரவுபெற்ற ஹிஸ்புல்லாவுடனான போர் தொடங்கி ஆறு வாரங்களுக்கும் மேலான நிலையில், அண்டை நாடான லெபனானில் சாத்தியமான போர்நிறுத்தம் குறித்து விவாதிக்க இஸ்ரேலின் அமைச்சரவை ஏப்ரல் 15ஆம் தேதி கூடியதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விரைவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படலாம் என்று லெபனான் அதிகாரிகள் கூறியதாக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனானில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதும், டெஹ்ரானின் அணுசக்தி லட்சியங்களை எவ்வாறு கையாள்வது என்பதும் முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய முட்டுக்கட்டைகளாக இருந்தன.

ஏப்ரல் 12ஆம் தேதி பேச்சுவார்த்தைகள் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க, ஈரானிய அதிகாரிகள் வரும் வார இறுதியில் மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்காகப் பாகிஸ்தானுக்குத் திரும்புவது குறித்து ஆலோசித்து வந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியும் சமரசப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகிப்பவருமான ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், மோதல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியாக ஏப்ரல் 15ஆம் தேதி டெஹ்ரானுக்குச் சென்றார்.

“ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் ஏப்ரல் 15ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார். மேலும், பாகிஸ்தான் சமரசப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற உரையாடல்களைப் ‘பயனுள்ளதாகவும், தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்’ அவர் வர்ணித்தார்.

ஏப்ரல் 8ஆம் தேதி இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு வாரக் காலப் போர்நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா முறையாகக் கோரியதாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.

மேலும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவை மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்புள்ளது என்று திருவாட்டி லீவிட் கூறினார்.

ஜெனரல் முனீர் டெஹ்ரான் சென்றடைந்ததைப் பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியது. கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குச் சமரசம் செய்த ஜெனரல் முனீர், இரு தரப்பினருக்கும் இடையிலான பிளவுகளைக் குறைக்க முயல்வார் என ஈரானியத் தகவல்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தன.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜெனரல் முனீரை வரவேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டதோடு, “இந்த வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதில் டெஹ்ரான் உறுதியாக உள்ளது,” என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்