ஹோர்முஸ் நீரிணை திறப்பு குறித்து ஈரான்: அமெரிக்காவின் பதிலுக்கு விடை தரப்படும்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு குறித்து ஈரான்: அமெரிக்காவின் பதிலுக்கு விடை தரப்படும்

பரிசீலனை முடிந்த பிறகு விடை தரப்படும் என்றது ஈரான்
படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 6:56 pm

1 mins read

துபாய்: ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்வைத்த பரிந்துரைக்கு அமெரிக்கா பதிலளித்தது. அதன் தொடர்பில் பரிசீலனை செய்து முடித்த பிறகு அமெரிக்காவுக்கு நடுநிலையாளர்கள் மூலம் தாங்கள் விடை தரப்போவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திங்கட்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்தார்.

அதோடு, நடுநிலையாளர்களின் மூலம் ஈரான் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிவருவதாக திரு பாகேய், செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார். அவர் மேல்விவரங்களை வழங்கவில்லை. ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்டவை சமரசப் பேச்சாளர்களாகச் செயல்பட்டிருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் தொடங்கியது.

கடந்த ஜூன் மாதம் நடப்புக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதையடுத்து அவ்வப்போது தாக்குதல்கள் நடந்துவந்தன. பிறகு செப்டம்பர் நடுப்பகுதியில் ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான பரிந்துரையை முன்வைத்தது. அதற்கு அமெரிக்கா பதிலளித்ததையும் ஈரான் பின்னர் உறுதிப்படுத்தியது.

எனினும், அதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர ஈரான் முன்வைத்த ஏழு நிபந்தனைகளை வா‌ஷிங்டன் சரியாகக் கருத்தில்கொள்ளவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) கூறினார்.

இந்நிலையில், சவூதி அரேபியாவுக்கும் ஏமனின் ஹூதிப் படையினருக்கும் இடையே மோசமடைந்துவரும் சண்டை குறித்தும் பேசிய திரு பாகேய், பேச்சுவார்த்தை மூலம் அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவ ஈரான் தயாராய் இருப்பதை மறுவுறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காஈரான்கத்தார்பாகிஸ்தான்நீரிணைமத்திய கிழக்கு