டெஹ்ரான்: ஈரான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து சாத்தியமாகும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
ஈரானிய ஆயுதப் படையினரின் ஒத்துழைப்புடன் இரு வாரங்களுக்கு இது சாத்தியமாகும் என்று புதன்கிழமை (ஏப்ரல் 8) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவுடனான பேரப்பேச்சுகள் வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கும் என்று ஈரானின் உச்சப் பாதுகாப்பு மன்றம் கூறியிருக்கிறது.
பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவிடம் தனது பத்து-அம்சப் பரிந்துரையைச் சமர்ப்பித்த பிறகு மன்றம் அவ்வாறு கூறியதாக ஈரானிய அரசாங்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை போர் முடிவுற்றதற்கான அறிகுறியன்று எனவும் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
“எதையும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் உள்ளோம். எதிரி ஒரு சிறிய தவறிழைத்தாலும் அதற்கு முழு வீச்சில் பதிலடி தரப்படும்,” என்று ஈரானிய உச்சப் பாதுகாப்பு மன்றம் எச்சரித்துள்ளது.
பேச்சுவார்த்தை 15 நாள்கள் வரை நீடிக்கக்கூடும் என்கிறது ஈரான்.
இவ்வேளையில், ஹோர்முஸ் நீரிணையைப் போக்குவரத்துக்கு ஈரான் திறந்துவிட்ட பிறகு சண்டை நிறுத்தம் அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்கள் கூறுகின்றன.

