டெஹ்ரான்: லெபனான் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிச் செல்லலாம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
போர்நிறுத்தக் காலம் முடியும்வரை இந்த அனுமதி நடப்பில் இருக்கும் என அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஈரானின் துறைமுகங்கள், கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த வழித்தடத்தைப் பின்பற்றியே கப்பல்களின் போக்குவரத்து அமையும்,” என்றார்.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்காவின் ஆதரவுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்கா, ஈரான் இடையிலான விரிவான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானின் உட்பகுதிகளில் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும்.
திரு அராக்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை 9 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது.
ஈரானின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு
ஈரான் தனது நீரிணையை முழுமையாகத் திறந்துள்ளதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.
இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்ட அவர், “ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும் கப்பல் போக்குவரத்துக்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மிக்க நன்றி!” என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், ஈரானுடன் ஒரு முறையான உடன்பாடு எட்டப்படும் வரை, அந்நாட்டின் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை ‘முழுவீச்சில் நடப்பில் இருக்கும்’ என்று திரு டிரம்ப் பின்னர் வெளியிட்ட வேறொரு பதிவில் கூறினார்.
“இந்த உடன்பாட்டுக்கான நடைமுறை மிக விரைவாக நடைபெற வேண்டும். ஏனெனில், பெரும்பாலான முக்கிய அம்சங்கள் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது,” என்றார் அவர்.

