கோத்தா திங்கி: திங்கட்கிழமை தொடங்கிய, ஜாலான் பைபாஸ் செபானா கோவ்-புங்கை சாலையோரத்தில் உள்ள 51.4 ஹெக்டர் பரப்பளவிலான சதுப்பு நிலத் தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு, கடும் வெப்பமும் பலத்த காற்றும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன.
‘ஏ’ பகுதியில் 9.7 விழுக்காடு, அதாவது 35.6 ஹெக்டர், ‘பி’ பகுதியின் முழுப் பகுதியும் (15.8 ஹெக்டர்) கட்டுக்குள் வந்துள்ளதாகத் தீயணைப்புப் பிரிவின் துணைத் தலைவர் பஹாருதீன் இட்ரிஸ் கூறினார்.
“எங்கள் முக்கிய சவால்கள் பலமான காற்று, வெப்பமான வானிலை, போதிய தண்ணீர் இல்லாமை ஆகும். ‘ரான்ஹில் எஸ்ஏஜே’ உட்பட தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் தண்ணீர் லாரிகளைப் பயன்படுத்தி நாங்கள் தண்ணீரைப் பெறுகிறோம்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களைச் சந்தித்த போது, “அப்பகுதியில் புதிய தீ விபத்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் தீயினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ” என்று கூறினார்.
குறிப்பாக ‘ஏ’ பகுதியில், தீத்தடுப்புகளை உருவாக்குவதற்காக, சதுப்பு நிலம், வனப் பகுதிகளில் இயங்கக்கூடிய நீரிலும் நிலத்திலும் பயன்படுத்தக்கூடிய பெரிய அகழ்விகள் தேவைப்படுவதால், நண்பகலில் வந்து சேரவிருந்த மற்ற அமைப்புகளின் இரண்டு அகழ்விகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், அவர்கள் நேரடி அணுகுமுறையைப் பயன்படுத்தி வருவதாக அவர் விளக்கினார்.
காற்று வலுப்பெற்றால் தீ பரவக்கூடும் என்ற அபாயம் இருப்பதாகவும், ஆனால் ‘பி’ பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பஹருதீன் கூறினார்.
“வானிலை மிகவும் வெப்பமாக இல்லாவிட்டால், அங்கு (’பி’ பகுதி) தீயை அணைத்துவிட முடியும் என்று நம்புகிறோம். ஆனால் ‘ஏ’ பகுதியில், நீரிலும் நிலத்ததிலும் பயன்படுத்தக்கூடிய பெரிய அகழ்விகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த எங்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
தீப்பிடித்த பகுதி விவசாய நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதன் அருகிலுள்ள ஒரு சிறிய பகுதி கெலேடாங் ஃபெல்டாவுக்குச் சொந்தமான செம்பனை எண்ணெய்த் தோட்டம் என்றும், மற்ற பகுதிகள் இன்னும் சாகுபடி செய்யப்படாமல் உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் பஹருதீன் தெரிவித்தார்.


