கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து அதன் கூட்டணிக் கட்சியான ஜனநாயகச் செயல் கட்சியின் ஆண்டனி லோக் பதவி விலக முடிவுசெய்துள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை திங்கட்கிழமை (செப்டம்பர் 21) பிரதமர் அன்வார் இப்ராகிடம் சமர்ப்பிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், ஊழல் வழக்கின் எஞ்சிய ஈராண்டு சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க அனுமதி அளிக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சி அந்த முடிவை எடுத்துள்ளது.
“அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகினாலும் வரவிருக்கும் பொதுத் தேர்தல்வரை, ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பிரதமர் அன்வாருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம்,” என்று ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச்செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான திரு லோக் கூறியுள்ளார்.
“வீட்டுக்காவல் முடிவை ஜனநாயகச் செயல் கட்சி மட்டுமன்று, பல மலேசியர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் உணர்கிறோம்.
“எனவே, இவ்விவகாரத்தில் அடுத்த என்ன செய்வது என்பது குறித்து கட்சியின் தலைமையகத்தில் மூன்று மணி நேரம் விவாதித்தோம். இறுதியில், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகுவது என முடிவெடிக்கப்பட்டது,” என்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) திரு லோக் கூறினார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“எங்கள் கட்சியின் மற்ற தலைவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் பதவிகளைத் துறக்கத் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும், அனைவரும் இப்போது விலகினால் அரசாங்கம் கவிழக்கூடும் என்பதால் மற்றவர்கள் அரசாங்கப் பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பர்,” என்று அவர் விளக்கினார்.
“நாட்டின் நிலைத்தன்மைக்கும் அன்வார் நிர்வாகத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த முயலும் எதிரிகளுக்கு நாங்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை,” என்றும் அவர் கூறினார்.
ஜனநாயகச் செயல் கட்சி தொடர்ந்து அரசாங்கத்தில் நீடித்தாலும் திரு லோக்கின் பதவி விலகல் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான அம்னோ, பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டும் என்று இம்மாதத் தொடக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஜனநாயகச் செயல் கட்சியின் முடிவு வெளிவந்துள்ளது.
பிரதமர் அன்வாரின் பலகட்சிக் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்ற எந்தக் கட்சியையும்விட அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகச் செயல் கட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
