கோத்தா பாரு: தனிநபர்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகளையும் நிலங்களையும் வெளிநாட்டவருக்கு வாடகைக்கு விடுவதைத் தடுக்க மலேசியாவின் கிளந்தான் மாநில அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வீடுகளும் நிலங்களும் அந்தந்த உரிமையாளர்களுக்குச் சொந்தம் என்பது அதற்குக் காரணம்.
அரசாங்க நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கிளந்தான் உள்ளாட்சி, வீடமைப்பு, சுகாதார, சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஹில்மி அப்துல்லா தெரிவித்தார். அவ்வாறு நிகழ்ந்தால் அது சம்பந்தப்பட்ட இடத்திற்குள் ஒருவர் அத்துமீறி நுழைவதாகும்.
“கிள்ளான் பள்ளத்தாக்கில் இருக்கும் அதே நிலைமைதான். அங்கேயும் வீடுகள் வெளிநாட்டவருக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. அச்சொத்துகள் அந்தந்த உரிமையாளர்களுக்குச் சொந்தமாக இருப்பதால் இது தவறு கிடையாது.
“சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்க நிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து வர்த்தகங்களை நடத்தினாலோ அனுமதி பெறப்படாத பணிகளில் ஈடுபட்டாலோ மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தைக் கையாள சொத்து உரிமையாளர்களை, அவர்களின் வீடுகளையோ நிலங்களையோ வெளிநாட்டவருக்கு வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டினார்.
பாடாங் குச்சில் கம்பத்தில் வெளிநாட்டவர் பல ஆண்டுகளாக இரண்டு ஹெக்டர் பரப்பளவுக்கும் மேலான தோட்டத்தை வெளிநாட்டவர் வளர்ப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்ததால் திரு ஹில்மி இவ்வாறு விவரித்தார்.
