மலேசியாவில் சம்பளச் சீட்டு இல்லாதவர்களுக்கும் வீட்டு வசதி

மலேசியாவில் சம்பளச் சீட்டு இல்லாதவர்களுக்கும் வீட்டு வசதி

2 mins read
16d74031-9637-4f07-bc28-8c464e5eacbb
மலேசியாவின் புதிய வீட்டு வசதி கொள்கை அதிக இளையர்கள், நீக்குப்போக்கான வேலை நேர ஊழியர்களை நோக்கமாகக் கொண்டது. - கோப்புப் படம்: மலாய் மெயில் ஹரி ஹங்காரா

கோலாலம்பூர்: மலிவு விலை வீடுகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், குறிப்பாக இளையர்களுக்கும் நீக்குப்போக்கான நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வீட்டு உரிமையைப் பெறுவது தேசிய வீட்டுவசதி கொள்கை (டிஆர்என்) 2026-2035’ன் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று.

நிலையான வருமானம், சம்பளச் சீட்டு இல்லாத முதன்முறை வீடு வாங்குபவர்களுக்கு உதவும் ஒரு முக்கிய வழிமுறையாக ‘வீட்டுவசதிக் கடன் உத்தரவாதத் திட்டம்’ (எஸ்ஜேகே) உள்ளது என்று வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சின் துணைச் செயலாளர் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நலன்) சுல்கிஃப்லி சுலைமான் தெரிவித்தார்.

“சொந்தமாக முதன்முறை வீட்டை வாங்க விரும்பும் இளையர்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது,” என்று வியாழக்கிழமை பெர்னாமா டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராகக் கலந்துகொண்டபோது அவர் கூறினார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சர் ஙா கோர் மிங்கால் தொடங்கப்பட்ட டிஆர்என் 2026-2035, ஆறு கவனப் பகுதிகள், 17 உத்திகள், 59 செயல்திட்டங்களை உள்ளடக்கி, அடுத்த பத்தாண்டுகளுக்கான தேசிய வீட்டுவசதித் துறையின் திசையை நிர்ணயிக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் இந்தக் கொள்கையில் அடங்கும் என்றும் 2013ஆம் ஆண்டின் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அரசாங்கத்திடம் சமர்பிக்கப்படும் என்றும் சுல்கிஃப்லி தெரிவித்தார்.

இதற்கிடையே, அமைச்சின் வீட்டுவசதி திட்டமிடல் பிரிவின் துணைச் செயலாளர் ஜே. முரளி, தேசிய மலிவு விலை வீட்டுவசதி வழிகாட்டுதல்களை அமைச்சு செம்மைப்படுத்தி வருவதாகவும் விலையை நிர்ணயிப்பதில் வீட்டின் இருப்பிடம் ஒரு முக்கியக் காரணியாக இருப்பதாகவும் கூறினார்.

கோலாலம்பூருக்கும் பெர்லிஸ், சாபா, சரவாக் போன்ற மாநிலங்களுக்கு இடையே வீட்டு விலை, சந்தை நிலவரம் மாறுபடுவதால் நாடு தழுவிய அளவுகோலாக 300,000 ரிங்கிட் என நிர்ணயிப்பது பொருத்தமானதாக இருக்காது என்றார் அவர்.

“எங்களிடம் ஏற்கெனவே இதற்கான கட்டமைப்பு உள்ளது. தற்போது அதைச் செம்மைப்படுத்தி வருகிறோம். விரைவில் தேசிய மலிவு விலை வீட்டுவசதி வழிகாட்டுதல்களை வெளியிடுவோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவீட்டு விலைவீட்டு விற்பனைஊழியர்கள்