தலைநகரங்களைக் குறிவைத்து சவூதி அரேபியா, ஹூதிப் படையினர் தாக்குதல்

தலைநகரங்களைக் குறிவைத்து சவூதி அரேபியா, ஹூதிப் படையினர் தாக்குதல்

படம்: ஏஎஃப்பி

28 Nov 2026 - 6:05 pm

1 mins read

ரியாத்: ஏமன் மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தியதாக ஹூதிப் படைகள் தெரிவித்திருந்தன. அதையடுத்து, தலைநகர் ரியாத்தைக் குறிவைத்துப் பாய்ச்சப்பட்ட ஏவுகணையைச் சுட்டு வீழ்த்தியதாகச் சவூதி அரேபியா சனிக்கிழமையன்று (நவம்பர் 28) தெரிவித்துள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் மூண்டதிலிருந்து, அந்நாட்டின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்குப் பதிலடியாக, எண்ணெய் வளமிக்க சவூதி அரேபியாவை ஹூதிப் படையினர் ஏறக்குறைய நாள்தோறும் குறிவைத்து எரிசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள், ரியாத்தின் நிதி வட்டாரம் ஆகியவற்றின்மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஹூதிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தியதாக ஹூதி செய்தி நிறுவனமான ‘சபா’ செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

“சனாவின் அல்-தஹ்ரிர் மாவட்டத்தில் உள்ள பிர் அபு ஷம்லா குடியிருப்புப் பகுதியைச் சவூதிப் படைகள் குறிவைத்துத் தாக்கியதில் எட்டு வீடுகளும் மூன்று கடைகளும் சேதமடைந்தன,” என்று ‘சபா’ செய்தி நிறுவனம் டெலிகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்ததாக ஹூதி செய்தி ஊடகமான ‘அல்மசிரா’ தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்