தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை மாற்றத்தால் கருகிப்போன ஹவாயி

2 mins read
4e9e70a5-c0ad-421e-8734-cfc184cd5014
ஹவாயியில் காட்டுத்தீயில் சாம்பலாகிப்போன வீடுகள். - படம்: ஏஎஃப்பி

ஹவாயி: ஹவாயியில் மூண்ட காட்டுத்தீயால் குறைந்தது 53 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் நவீனகால வரலாற்றில் ஏற்பட்ட ஆகக்கொடிய காட்டுத்தீச் சம்பவங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்தப் பேரழிவு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியதற்கு வேறொரு முக்கியக் காரணமும் உண்டு.

ஹவாயி தாவரப் பசுமை நிறைந்த மாநிலம். காட்டுத்தீச் சம்பவங்களுடன் வழக்கமாகத் தொடர்புபடுத்தப்படும் வறண்ட நிலப்பரப்பன்று. பூமியில் அதிகரித்துவரும் வெப்பத்தால், எந்தவோர் இடமும் பேரழிவுக்கு உள்ளாகலாம் என்பதை இச்சம்பவம் உணர்த்துவதே அந்தக் காரணம்.

ஹவாயியில் 1990 முதல் ஆண்டுதோறும் மழை குறைந்து வந்துள்ளது. ஹவாயி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 2015ல் வெளியிட்ட ஆய்வின்படி, கண்காணிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மழைக்காலத்தில் 31 விழுக்காடு குறைவாகவும் வறட்சியான காலத்தில் 6 விழுக்காடு குறைவாகவும் மழை பெய்கிறது.

இந்த மாற்றத்திற்குப் பற்பல காரணங்கள் உள்ளன. ‘லா நினா’ பருவநிலைப் போக்கு மழையைக் குறைத்திருப்பது இதற்கு ஒரு காரணம். வெப்பநிலை உயரும்போது ஹவாயியில் மேகமூட்டம் குறைவது மற்றொரு காரணம். பெரிய புயல்கள் காலப்போக்கில் வடக்குநோக்கி நகர்ந்திருப்பது மூன்றாவது காரணம்.

இம்மூன்று காரணங்களும் வெப்பநிலை அதிகரிப்புடன் தொடர்புடையவை எனக் கருதப்படுகிறது.

ஹவாயியில் காட்டுத்தீ எரியும் மாவி வட்டாரத்தில் கிட்டத்தட்ட 16 விழுக்காடு பகுதிகள் கடும் வறட்சியில் இருக்கின்றன.

ஹவாயியின் மற்ற சில பகுதிகளில், 1990களிலிருந்து கரும்புத் தோட்டங்கள் செயல்படுவதை நிறுத்திக்கொண்டன. அந்நிலங்களில் பயிர்களுக்குப் பதிலாக வறண்ட புல் வளரத் தொடங்கியது. இவை எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதால் காட்டுத்தீ வேகமாகப் பரவுவதாக நம்பப்படுகிறது.

மேலும், டோரா புயல் ஹவாயியின் தென்பகுதியைச் செவ்வாய்க்கிழமை கடந்து சென்றது. இதனால், மணிக்கு 97 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் காற்று வீசி, காட்டுத்தீயைக் கடும் வேகத்தில் பரவச் செய்தது.

“பலத்த, வறண்ட காற்றே இந்தத் தீயைப் பரவச்செய்தது. பருவநிலை மாற்றங்கள், தீவுகள் மீதான பாதிப்புகள் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புள்ள நீண்டகாலப் போக்கின் ஒரு பகுதி இது,” என்றார் ஹானலூலூவுக்கான தலைமை மீள்திறன் அதிகாரியாகப் பணியாற்றிய திரு ‌ஜா‌‌ஷ் ஸ்டான்புரோ.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீஅமெரிக்காஹவாயி